புதுடெல்லி: இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் நமது நாட்டின் பருத்தி விவசாயிகள் மற்றும் ஜவுளித்துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இது தொடர்பாக சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘‘18% வரி vs. 0% வரி. (அதாவது இந்தியாவுக்கு 18% வரி, வங்கதேசத்துக்கு 0% வரி) பொய் சொல்வதில் வல்லுநர்களான பிரதமரும் அவரது அமைச்சரவையும் இந்த விஷயத்தில் எவ்வாறு குழப்புகிறார்கள் என்பதை நான் விளக்குகிறேன். அதோடு, இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் நாட்டின் பருத்தி விவசாயிகளையும் ஜவுளி ஏற்றுமதியாளர்களையும் அவர்கள் எவ்வாறு ஏமாற்றுகிறார்கள் என்பதையும் விளக்குகிறேன்.
வங்கதேசம் ஏற்றுமதி செய்யும் ஆடைகளுக்கு அமெரிக்கா 0% வரியை விதிக்கிறது. இதில் ஒரே நிபந்தனை அது அமெரிக்க பருத்தியை இறக்குமதி செய்ய வேண்டும் என்பதாகும்.
இந்திய ஆடைகளுக்கு அமெரிக்கா 18% வரி வதிக்கிறது. இது குறித்து நான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, “நாமும் அதே நன்மைகளைப் பெற விரும்பினால், நாமும் அமெரிக்காவிலிருந்து பருத்தியை இறக்குமதி செய்ய வேண்டும்.” என்று மோடி அரசாங்கத்தில் உள்ள ஒரு அமைச்சர் பதிலளித்தார். ஆனால், அதுவரை இந்த விவகாரம் ஏன் நாட்டு மக்களிடம் இருந்து மறைக்கப்பட்டது?
இது என்ன வகையான கொள்கை? உண்மையில் இதைத்தான் மத்திய அரசு விரும்புகிறதா? “முன்னால் சென்றால் கிணறு, பின்னால் சென்றால் பள்ளம்” என்ற சூழ்நிலைக்குள் நம்மை சிக்க வைக்கும் ஒரு பொறியா?
நாம் அமெரிக்க பருத்தியை இறக்குமதி செய்தால், நமது சொந்த விவசாயிகள் அழிந்து போவார்கள். நாம் பருத்தியை இறக்குமதி செய்யாவிட்டால், நமது ஜவுளித் தொழில் அழிந்து போகும்.
ஜவுளித் தொழிலும், பருத்தி சாகுபடியும் இந்தியாவின் வாழ்வாதாரத்தின் முதுகெலும்பாகும். கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் அவற்றைச் சார்ந்துள்ளது. இந்தத் துறைகளை சேதப்படுத்துவது என்பது கோடிக்கணக்கான குடும்பங்களை வேலையின்மையிலும், பொருளாதார நெருக்கடியிலும் தள்ளிவிடும்.
தொலைநோக்குப் பார்வையும் தேசிய நோக்கமும் கொண்ட அரசாங்கமாக இருந்திருந்தால், பருத்தி விவசாயிகள் மற்றும் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் இருவரின் நலன்களையும் பாதுகாக்கக்கூடிய ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கும்.
ஆனால் இதற்கு நேர்மாறாக, மோடியும் அவரது அமைச்சர்களும் இரு துறைகளுக்கும் ஆழமாக சேதத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளனர்’’ என தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், ‘‘அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், வங்கதேசத்துக்கு அமெரிக்கா வழங்கும் சலுகைகள் இந்தியாவுக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது. அமெரிக்க பருத்தியைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஆடைகளுக்கு அமெரிக்க சந்தையில் பூஜ்ஜிய வரியை நாமும் பெற முடியும். இது தொடர்பான ஒரு பிரிவும் வர்ததக ஒப்பந்தத்தில் இருக்கும்’’ என கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.