

புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல், கார்கேவுக்கு 3-வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதேநேரம், முதல் வரிசையில் ஓம் பிர்லா பக்கத்தில் ஜெகதீப் தன்கர் அமர்ந்திருந்தார்.
டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் 77-வது குடியரசு தினவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜே.பி.நட்டா, எஸ்.ஜெய்சங்கர், சிவராஜ் சிங் சவுகான், தர்மேந்திர பிரதான், பூபேந்தர் யாதவ், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், பியூஷ் கோயல், டெல்லி முதல்வர் ரேகா குப்தா, பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன், பல்வேறு நாடுகளின் தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோரும் இவ்விழாவில் பங்கேற்றனர்.
இந்த விழாவில், முதல் வரிசையில் அமர்ந்திருந்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுடன் குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
முன்னதாக, 3-வது வரிசையில் அமர்ந்திருந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் கார்கே அமர்ந்திருந்தார்.
காங்கிரஸ் கண்டனம்: இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "ஒரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரை இவ்வாறு நடத்துவது, கண்ணியம், மரபு மற்றும் நெறிமுறைகளின் தரங்களுக்கு உட்பட்டதா? இது ஒரு தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப்பட்ட அரசாங்கத்தின் விரக்தியை மட்டுமே வெளிப்படுத்துகிறது" என்றார்.