

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று கேரளாவின் கோட்டயம் பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அவருக்கு கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். படம்: பிடிஐ
திருவனந்தபுரம்: கேரளாவில் பாஜக, மார்க்சிஸ்ட் ரகசிய கூட்டணி அமைத்துள்ளன என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
கேரளாவில் வரும் 9-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் தலைமையிலான ஆளும் இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
தேர்தல் நெருங்கும் சூழலில் 3 அணிகளும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இரு நாள் பயணமாக நேற்று கேரளாவுக்கு சென்றார். பத்தனம்திட்டா, புதுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது: கேரள சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி மார்க்சிஸ்ட் கட்சியும் பாஜகவும் ரகசிய கூட்டணியை அமைத்துள்ளன. இந்த ரகசிய கூட்டணிக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது 36 வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. என்னிடம் 55 மணி நேரம் இடைவிடாமல் விசாரணை நடத்தப்பட்டது.
ஆனால் ஊழலில் திளைத்து வரும் மார்க்சிஸ்ட் தலைமை மீது மத்திய அரசு விசாரணை நடத்தவில்லை. கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மத்திய அரசு எந்த வகையிலும் அழுத்தம் கொடுக்கவில்லை. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்று உள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி பாலக்காட்டில் பிரச்சாரம் செய்தபோது சபரிமலை ஊழல் விவகாரம் குறித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மார்க்சிஸ்ட் கட்சிக்காக அவர் மவுனம் காக்கிறார்.
மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில் கேரளத்தின் பொருளாதாரம் பின்னடைவை சந்தித்து வருகிறது. ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி தொழிலாளர்களின் நலனுக்காக போராடுவதாக கூறுகிறது.
ஆனால் ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் நலன்களில் மார்க்சிஸ்ட் தலைவர்கள் துளியும் அக்கறை செலுத்தவில்லை. அதற்கு மாறாக ரப்பர் தோட்ட முதலாளிகளின் நலனில் தீவிர அக்கறை செலுத்தி வருகின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.