

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
புதுடெல்லி: “டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்த அனுமதி அளித்தது யார்” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட மிருகத்தனமான தாக்குதலுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் மீது உயிர்க்கொல்லியான பெல்லட் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட 19 வயது மாணவர் ஒருவர் கடுமையான வலியை அனுபவித்து வருகிறார். பெல்லட் குண்டு தாக்கியதால் அவர் தனது பார்வையை இழக்கக் கூடும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். டெல்லியில் பாதுகாப்புப் பணிக்காக நிறுத்தப்பட்டுள்ள படைகள் இறுதியில் உங்களது கட்டுப்பாட்டின் கீழ்தான் இயங்குகின்றன.
எனவே உள்துறை அமைச்சராக, மாணவர்கள் மீது பெல்லட் துப்பாக்கி உள்ளிட்ட கொடிய பலத்தைப் பயன்படுத்த நீங்கள் அனுமதி அளித்தீர்களா? இல்லையென்றால் அனுமதி அளித்தது யார்? சாதாரண உடை அணிந்தவர்கள் மாணவர்களை லத்தியால் தாக்கியவர்கள் காவலர்களா அல்லது தன்னார்வத் தொண்டர்களா? அவர்களைக் களமிறக்க அனுமதித்தது யார்? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.