தலைமைத் தகவல் ஆணையரை நியமிக்க பிரதமர் மோடியுடன் ராகுல் ஆலோசனை: அமைச்சர் அமித் ஷாவும் பங்கேற்பு

தலைமைத் தகவல் ஆணையரை நியமிக்க பிரதமர் மோடியுடன் ராகுல் ஆலோசனை: அமைச்சர் அமித் ஷாவும் பங்கேற்பு
Updated on
2 min read

புதுடெல்லி: மத்திய அரசின் தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்களை தேர்வு செய்வது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

நாட்டில் தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்களைத் தேர்வு செய்யும் குழுவில் பிரதமர், மூத்த அமைச்சர் ஒருவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அதன்படி பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ராகுல் காந்தி ஆகியோர் இக்குழுவில் உள்ளனர். மத்திய அரசின் புதிய தலைமைத் தகவல் ஆணையர் பதவி காலியாக உள்ளது. மேலும், காலியாக உள்ள 8 இடங்களுக்கு தகவல் ஆணையர்களை நியமிக்க வேண்டும்.

இதைத் தொடர்ந்து மத்திய அரசின் தலைமைத் தகவல் ஆணையர், தகவல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா, ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் தகவல் ஆணையர்கள் மட்டுமின்றி மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்வது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் அறையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. மூவரும் சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் ஆலோசனை நடத்தினர்.

ஒன்றரை மணி நேரம்.. அப்போது இந்தப் பதவிகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு சிலரது பெயர்களை பரிந்துரை செய்துள்ளது. ஆனால் அவர்களை நியமிப்பதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டம் நேற்று பகல் 1 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2.30 மணி வரை நீடித்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

8 இடங்கள் காலி: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 12 (3)-ன் கீழ் தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்கள் பிரதமர் தலைமையிலான இந்த குழுவால் நியமனம் செய்யப்படுகின்றனர். தற்போது 10 தகவல் ஆணையர்களில் இருவர் மட்டுமே உள்ள நிலையில், 8 இடங்கள் காலியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தகவல் அறியும் உரிமை தொடர்பான புகார்கள், தகவல் ஆணையர்களால் கண்காணிக்கப்படுகின்றன.

மத்திய அரசின் தலைமைத் தகவல் ஆணையராக கடந்த செப்டம்பர் வரை ஹிராலால் சமாரியா பதவியில் இருந்தார். அவர் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அந்தப் பணியிடமும், 8 தகவல் ஆணையர் பணியிடங்களும் காலியாக உள்ளன. மொத்தம் உள்ள 10 தகவல் ஆணையர்களில் தற்போது ஆனந்தி ராமலிங்கம், வினோத் குமார் திவாரி ஆகியோர் மட்டுமே பணியில் தொடர்கின்றனர்.

30,838 புகார்கள்: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 30,838 புகார்கள் இன்னும் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் இந்தப் பணியிடங்களை விரைவில் நிரப்பும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

புதிய நியமனம் தொடர்பான ஆலோசனை முடிந்துள்ளதால், ஓரிரு நாட்களில் தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் தகவல்கள் ஆணையர்கள், ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைமைத் தகவல் ஆணையரை நியமிக்க பிரதமர் மோடியுடன் ராகுல் ஆலோசனை: அமைச்சர் அமித் ஷாவும் பங்கேற்பு
நாட்டிலேயே அதிகபட்சமாக ஒடிசா எம்எல்ஏ.க்கள் சம்பளம் ரூ.3.45 லட்சமானது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in