

புவனேஸ்வர்: ஒடிசாவில் எம்எல்ஏ.க்களின் சம்பளத்தை 3 மடங்காக உயர்த்த சட்டப்பேரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது. நாட்டிலேயே ஒடிசாவில்தான் எம்எல்ஏ.க்களுக்கு சம்பளம் அதிகம்.
ஒடிசா மாநிலத்தில் எம்எல்ஏ.க்களின் சம்பளத்தை உயர்த்துவது தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் ஒரு மனதாக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி, எம்எல்ஏ.க்களுக்கு தற்போதுள்ள சம்பளத்தை விட 3 மடங்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது எம்எல்ஏ.க்கள் ரூ.1.11 லட்சம் சம்பளம் பெறுகின்றனர். இது ரூ.3.45 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. முதல்வர், அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் எம்எல்ஏ.க்களின் ஓய்வூதியமும் 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது பதவியில் உள்ள எம்எல்ஏ.க்களில் யாராவது உயிரிழந்தால் அவரது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
இதுகுறித்து அமைச்சர் முகேஷ் கூறும்போது, ‘‘சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று கடந்த 2017-ம் ஆண்டு முதல் எம்எல்ஏ.க்கள் கோரி வருகின்றனர். அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது’’ என்றார்.
முன்னாள் எம்எல்ஏ.க்களுக்கு ஓய்வூதிய மாக ரூ.1.17 லட்சம் வழங்கப்படும். முதல்வருக்கு மாதம் ரூ.3 லட்சத்து 74,000, சபாநாயகர், துணை சபாநாயகருக்கு ரூ.3 லட்சத்து 68,000, அமைச்சர்கள் ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் சம்பளமாக பெறுவார்கள். கேபினட் அமைச்சர்கள் ரூ.3 லட்சத்து 62 ஆயிரம் பெறுவார்கள். அரசு தலைமை கொறடா, துணை கொறடா ஆகியோர் முறையே ரூ.3 லட்சத்து 62,000, ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் சம்பளம் பெறுவார்கள்.
கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-வது சட்டப்பேரவை பொறுப்பேற்றது. அன்றைய தினம் முதல் இந்த சம்பள உயர்வு அமலுக்கு வருவதாக அமைச்சர் முகேஷ் மகாலிங் அறிவித்தார்.