

பாஜக செய்தித் தொடர்பாளர் பூனாவாலா
புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வரும் 15-ம் தேதி ஜெர்மனியின் பெர்லின் நகருக்கு செல்கிறார்.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் செஷாத் பூனா வாலா நேற்று கூறியதாவது: "நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில் ஜெர்மனி பயணம் மேற்கொள்கிறார் ராகுல் காந்தி. அவர் சுற்றுலாவின் தலைவராக இருக்கிறார். அடிக்கடி வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்கிறார்.
எதிர்க்கட்சித் தலைவர் (லீடர் ஆப் பார்லிமென்ட்) என்பதற்கு சுற்றுலாவின் தலைவர் (லீடர் ஆப் பர்யதன்) மற்றும் விருந்துகளின் தலைவர் (லீடர் ஆப் பார்ட்டியிங்) என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் ராகுல். இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறும்போது, "நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறும்போது பெரும்பாலும் வெளிநாட்டு சுற்றுப் பயணம் செல்வார் ராகுல். திரும்பி வந்து நாடாளுமன்றத்தில் எனக்கு பேச வாய்ப்பளிப் பதில்லை என குறை கூறுவார்" என்றார்.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறும்போது, "பிரதமர் மோடி பாதி நேரம் வெளிநாடுகளில் தான் இருக்கிறார். அப்படி இருக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் வெளிநாடு சென்றால் மட்டும் ஏன் கேள்வி கேட்கிறார்கள்?" என்றார்.