கோப்புப் படம்
புதுடெல்லி: “இந்திய கல்வி முறை என்பது அனைவரையும் உள்ளடக்கியது அல்ல. லட்சக்கணக்கான மாணவர்களை வெளியே வைத்திருக்க வடிவமைக்கப்பட்டது.” என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, மாணவர்கள் சிலருடன் கலந்துரையாடிய வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில், “நாட்டில் நிலவும் கல்வி முறை நம்பிக்கை தரக்கூடியது அல்ல. இது அனைவரையும் உள்ளடக்கியதும் அல்ல.
உங்களிடம் பணம், அதிகாரம் இல்லையென்றால் அல்லது ஆங்கிலம் பேசத் தெரியாவிட்டால், சிஸ்டம் உங்களை இரண்டாவது சிந்தனை இன்றி வெளியே தள்ளும். இதை நீங்கள் கல்விமுறை என்று அழைக்க முடியாது. இது ஒரு விலக்கு முறை. லட்சக்கணக்கான இளைஞர்களை வெளியே வைத்திருக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் குரல் நிகழ்ச்சி மூலம் ராகுல் காந்தி மாணவர்களைச் சந்தித்து வருகிறார். கோட்டா, டேராடூன், பிரயாக்ராஜ், புனே, இந்தூர் நகரங்களில் மாணவர்களின் குரல் நிகழ்ச்சியை நடத்திய ராகுல் காந்தி சமீபத்தில் சென்னையில் அந்நிகழ்ச்சியை நடத்தினார்.
மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அவர்கள் விரும்பும் தீர்வுகள் குறித்து இந்த நிகழ்ச்சி பேசுகிறது. இத்தகைய நிகழ்ச்சிகள் மூலம் மாணவச் சமுதாயத்தின் குரலை தேசிய அளவில் ஒலிக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை ராகுல் காந்தி எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.