‘எனது பெற்றோர் குறித்து நான் பேசியதை கேலி செய்வதா?’ - பாஜகவினரை சாடிய ராகுல் காந்தி

புத்தக வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி பேசிய காட்சி

புத்தக வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி பேசிய காட்சி

Updated on: 
2 min read

புதுடெல்லி: ‘எனது பெற்றோருக்கு இடையிலான அன்பான தருணம் குறித்து தான் பேசியதை கேலி பேசும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் இதயங்களில் வெறுப்புதான் உள்ளது. அதுதான் அவர்கள், அன்பை உணர்வதையும் அதை வெளிப்படுத்துவதையும் தடுக்கிறது’ என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுதிய ‘பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்’ என்ற சுயசரிதை கடந்த 10-ம் தேதி வெளியானது. இந்த புத்தகத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா டெல்லி ஐடிசி மவுரியா நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது.

தமிழக முதல்வர் விஜய், கர்நாடக முதல்வர் சிவகுமார், கேரள முதல்வர் சதீசன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி உட்பட பல்வேறு கட்சிகளின் மூத்த தலைவர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

இந்த விழாவில் பேசிய ராகுல் காந்தி, தனது தந்தைக்கும் தாய்க்கும் இடையே இருந்த அன்பு மற்றும் நெருக்கம் குறித்துப் பேசி இருந்தார். ராகுல் காந்தியின் இந்தப் பேச்சு குறித்து பாஜக ஆதரவாளர்கள் பலரும் சமூக ஊடகங்களில் கேலியாக கருத்துகளைத் தெரிவித்திருந்தனர்.

அந்த கருத்துக்களுக்குப் பதில் அளிக்கும் வகையில் ராகுல் காந்தி இன்று வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்களின் இதயங்களில் கோபம், பயம், வெறுப்பு ஆகியவை ஒரு வலையை பின்னியுள்ளது. இது அவர்கள் அன்பை உணர்வதையும் வெளிப்படுத்துவதையும் தடுக்கிறது.

ஓர் உண்மையான இந்துவாக, அவர்களை இந்த வலையில் இருந்து விடுவிப்பது எனது கடமை. அப்போதுதான் அவர்களும் தங்கள் வாழ்க்கையில் அன்பின் மற்றும் பிணைப்பின் அற்புதமான அழகையும் மகிழ்ச்சியையும் உணரத் தொடங்க முடியும். உண்மை, தெய்வீகம், அழகு.’ என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நூல் வெளியீட்டு விழாவில் பேசிய ராகுல் காந்தி, ”இங்கு அரசியல் பேசக்கூடாது என எனக்கு கடுமையாக உத்தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. நான் அதை பின்பற்றப் போகிறேன். ஒரு மகனாக, பிள்ளைகளாக எங்களில் யாராவது ஒருவர் எனது தாயைப் பற்றிய சில நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.

இங்கே அமரிந்தர் சிங் (பஞ்சாப் முன்னாள் முதல்வர்) இருக்கிறார். எனது தாயும் சந்தையும் விவாதிப்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். ஆனால், அவர்கள் சண்டையிட்டுக் கொண்டதை ஒரே ஒரு முறை மட்டுமே நாங்கள் பார்த்தோம். தற்செயலான நிகழ்வு என்னவென்றால், அந்தச் சம்பவம் நடந்தபோது எனது தந்தை அமரிந்தர் சிங்குடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். அவர்கள் சண்டையிட்டுக் கொண்டதை நாங்கள் பார்த்த ஒரே தருணம் அதுதான்.

ஒவ்வொரு வேளை உணவின்போதும் அப்பா அமர்ந்திருப்பார். அவரது மடியில் அம்மா அமர்ந்திருப்பார். இதுதான் இயல்பான விஷயம் என்று நான் நினைத்தேன். என் நண்பர்களின் வீட்டுக்குச் சென்றபோது அங்கு அவரது தாய், அவரது தந்தையின் மடியில் அமராததைப் பார்த்து, உங்கள் அம்மா ஏன் உங்கள் அப்பா மடியில் அமரவில்லை என கேட்டிருக்கிறேன். மதிய உணவோ அல்லது இரவு உணவோ, அம்மா எப்போதும் அப்பாவின் மடியில்தான் அமர்ந்திருப்பார்.

எனது பெற்றோரைப் பற்றி பல கதைகள் புழக்கத்தில் இருந்தன. அதில் முக்கியமான ஒன்று, அவர்கள் வர்சிட்டி உணவகத்தில் சந்தித்துக்கொண்டது பற்றியது. பல ஆண்டுகள் கழித்து, நான் கேம்பிரிட்ஜில் இருந்தபோது என் தோழியிடம், வா வர்சிட்டி உணவகத்துக்குச் செல்லலாம் என்று கூறினேன். என் பெற்றோர் முதன்முதலாக சந்தித்துக்கொண்ட இடத்தைப் பார்க்க விரும்பினேன். நான் அங்கு அமர்ந்தேன்.

அவர்கள் மெனுவைக் கொண்டுவந்தபோது, நான் எனது பெற்றோர் இந்த உணவகத்தில்தான் சந்தித்துக்கொண்டார்கள் என்று சொன்னேன். அங்கிருந்த பணியாளர் ஒருவர் என்னைப் பார்த்து, ஓ அவர்களைத் தெரியுமே, எனக்குத் தெரியும் என்றார். அவர்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியம் என நான் கேட்டேன். அதற்கு அவர், ஓ அந்த இருவர்தானே, நீங்கள் யாரைப் பற்றி சொல்கிறீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும் என்றார்” என பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>புத்தக வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி பேசிய காட்சி</p></div>
“எத்தனால் கலப்பை விமர்சிப்போர் முட்டாள்களே” - மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி காட்டம்

X