

ராகுல் காந்தி | கோப்புப் படம்
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நமது நாட்டை அமெரிக்காவிடம் விற்றுவிட்டார் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: அவமானம் குறித்து நீங்கள் (மோடி) பேசுகிறீர்கள். அவமானத்தின் அர்த்தத்தை நான் உங்களுக்கு சொல்கிறேன். அமெரிக்காவின் பாலியல் வன்கொடுமை குற்றவாளி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளில் உங்கள் பெயர், உங்கள் அமைச்சரின் பெயர், உங்கள் நண்பரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மிகவும் மோசமான குற்றவாளியுடன் உங்களது பெயர்கள் தொடர்புபடுத்தப்பட்டு இருக்கிறது. இதுதான் உண்மையான அவமானம்.
அமெரிக்காவுடன் நீங்கள் மேற்கொள்ள இருக்கும் வர்த்தக ஒப்பந்தம் மூலம் நமது நாட்டையே அமெரிக்காவிடம் விற்றுவிட்டீர்கள். இது மிகவும் வெட்கக்கேடானது. நமது நாட்டின் தரவுகளை அமெரிக்காவிடம் ஒப்படைத்து உள்ளீர்கள். விவசாயிகள், ஜவுளி தொழிலை நீங்கள் அழித்துவிட்டீர்கள்.
அமெரிக்காவில் அதானிக்கு எதிராக நடைபெறும் வழக்கு உங்களை தூங்கவிடாமல் செய்திருக்கிறது. இந்த வழக்கு பாஜக மற்றும் உங்கள் நிதி கட்டமைப்புக்கு எதிரான வழக்கு ஆகும். நீங்களும் உங்கள் நண்பர்கள் அனில் அம்பானி, அதானியும் உங்களுக்கு விருப்பமானதை செய்யுங்கள். நானும் காங்கிரஸ் தொண்டர்களும் நாட்டைப் பாதுகாப்போம். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.