

புது டெல்லி: ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த மாநிலங்களவை எம்.பி ராகவ் சத்தா கடந்த 24 மணி நேரத்திற்குள் இன்ஸ்டாகிராமில் 10 லட்சம் ஃபாலோயர்ஸை இழந்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் ஆறு மாநிலங்களவை எம்.பிக்களுடன் ராகவ் சத்தா ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த நிலையில், சமூக ஊடகத்தில் அவரின் செல்வாக்கு சரிந்துள்ளதாக தெரிகிறது. சில வாரங்களுக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா துணைத் தலைவர் பதவியிலிருந்து ராகவ் சத்தா நீக்கப்பட்ட பிறகு, நேற்று அவர் பாஜகவில் இணைந்தார். அவரின் இந்த அரசியல் நிலைப்பாடு ஜென்ஸி தலைமுறையினரைக் கவரவில்லை என்று தெரிகிறது.
ராகவ் சத்தா பாஜகவில் இணைந்த 24 மணி நேரத்திற்குள் இன்ஸ்டாகிராமில் சுமார் பத்து லட்சம் ஃபாலோயர்களை இழந்துள்ளார். வெள்ளிக்கிழமை அன்று, இன்ஸ்டாகிராமில் ராகவ் சத்தாவிற்கு 1.46 கோடி ஃபாலோயர்கள் இருந்தனர். சனிக்கிழமை மதியம் 1 மணிக்கு, அவரது ஃபாலோயர்களின் எண்ணிக்கை 1.35 கோடியாகக் குறைந்தது.
ராகவ் சத்தாவுக்கு எதிராக இன்ஸ்டாகிராமில் 'பின்தொடர்வதை நிறுத்து' என ஜென் ஸி தலைமுறையினர் மேற்கொண்ட பிரச்சாரம், 24 மணி நேரத்தில் அவரின் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சம் குறைய வழிவகுத்துள்ளது என்று என்சிபி (எஸ்பி) செய்தித் தொடர்பாளர் அனிஷ் கவாண்டே ட்வீட் செய்துள்ளார். "இணையம் ஒரே இரவில் உங்களை ஒரு கதாநாயகனாக மாற்ற முடியும். அதே இணையம் ஒரே இரவில் உங்களை பூஜ்ஜியத்திற்கும் கொண்டு செல்ல முடியும்" என்று அவர் கூறினார்.
"unfollowRaghavChadha" என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்கள் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவை விமர்சிக்கும் தனது பழைய பதிவுகளை ராகவ் சத்தா நீக்கிவிட்டதாகவும் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.