குவாட் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு: இந்தோ - பசிபிக் கடல்சார் கண்காணிப்பு திட்டத்தை தொடங்க முடிவு

குவாட் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு: இந்தோ - பசிபிக் கடல்சார் கண்காணிப்பு திட்டத்தை தொடங்க முடிவு
Updated on
2 min read

புதுடெல்லி: இந்தோ - பசிபிக் முழுவதும் கடல்சார் கண்காணிப்பை மேம்படுத்தவும், முக்கிய கனிமங்கள் மற்றும் எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் குவாட் கூட்டமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான குவாட் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் புதுடெல்லியில் இன்று (மே 26) நடைபெற்றது. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, ஜப்பான் வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மோட்டேகி, ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜெய்சங்கர், “இருதரப்பு கருத்துப் பரிமாற்றம், தற்போதைய உலக நிலைமை ஆகியவை குறித்தே எங்கள் விவாதங்கள் இருந்தன. இயல்பாகவே இந்தோ-பசிபிக் பிராந்திய விவகாரங்கள் குறித்தே எங்கள் ஆலோசனைகளின் கவனம் குவிந்திருந்தது. இந்தோ - பசிபிக் பிராந்தியத்தின் வெவ்வேறு முனைகளில் அமைந்துள்ள நான்கு கடல்சார் ஜனநாயக நாடுகளாக நாங்கள் இருப்பதால் எங்கள் கண்ணோட்டங்களைப் பரிமாறிக்கொண்டது மிகவும் மதிப்புமிக்க ஒரு நடவடிக்கையாக இருந்தது.

பாதுகாப்பான, தடையற்ற கடல்சார் வர்த்தகம் குறித்து நாங்கள் விவாதித்தோம். சர்வதேச சட்டங்களை மிக கவனமாகப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை நாங்கள் மீண்டும் வலியுறுத்தினோம். சுதந்திரமான, திறந்த இந்தோ - பசிபிக் பிராந்தியத்துக்கு பல பரிமாணங்களும் முகங்களும் உள்ளன. அவற்றில் பலவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை குவாட் ஆய்வு செய்தது.

எரிசக்தி, உரங்கள், முக்கிய கனிமங்களின் இருப்பு நிலை குறித்தும் நாங்கள் விவாதித்தோம். வரும் நாட்களில், பொருளாதார நடவடிக்கையாக இருந்தாலும், எரிசக்தி வர்த்தகமாக இருந்தாலும், கடல்சார் வர்த்தகமாக இருந்தாலும் இந்தோ - பசிபிக் பிராந்தியம் உலகுக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறும். அதற்கேற்ப, குவாட் கூட்டமைப்பின் பொறுப்புகளும் அதிகரிக்கும். அதற்கு நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

பயங்கரவாதம் எனும் பொதுவான அச்சுறுத்தல் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். பயங்கரவாதம் விஷயத்தில் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும்; பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஆளாகும் நாடுகளுக்கு தங்களை பாதுகாத்துக்கொள்ளும் உரிமை உண்டு” என தெரிவித்தார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ பேசும்போது, “இந்தோ - பசிபிக் கடல்சார் கண்காணிப்பு ஒத்துழைப்புத் திட்டத்தை தொடங்க குவாட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது இந்தோ - பசிபிக் பகுதியில் நமது ஒவ்வொரு நாட்டின் கட்சார் கண்காணிப்புத் திறன்களையும் பயன்படுத்திக்கொள்ளும். குவாட் நாடுகளிடையே இந்தோ - பசிபிக் கடல்சார் கள விழிப்புணர்வு திட்டம் விரிவுபடுத்தப்படும்.

கடல்சார் பாதுகாப்பு தடைபடும்போது என்ன நடக்கும் என்பதை தற்போதைய நிகழ்வுகள் நமக்கு நினைவூட்டுவதைத் தாண்டி, கடல்சார் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. காரணம், உலகளாவிய கடல்சார் வர்த்தகத்தில் 60% இந்தோ - பசிபிக் வழியாகவே நடக்கிறது. இது நான்கு குவாட் நாடுகளுக்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற நாடுகளுக்கும் ஒரு முக்கிய தேசிய நலன் ஆகும்.

இரண்டாவது முயற்சியாக, பசிபிக் தீவுகளில் உள்ள துறைமுகங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்த நாங்கள் கூட்டாகச் செயல்படப் போகிறோம். பிஜியின் துறைமுக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக அந்நாட்டுடன் இணைந்து பணியாற்றும் திட்டங்களை நாங்கள் அறிவிக்கிறோம். குவாட் கூட்டமைப்பு, ஒரு துறைமுக உள்கட்டமைப்பு திட்டத்தில் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல்முறை” என தெரிவித்தார்.

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை உறுதி செய்வதற்கான ஒரு ராஜதந்திர தீர்வை நோக்கிய முயற்சிகளை குவாட் அங்கீகரித்துள்ளது என்று ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் வோங் கூறினார். “கடல் போக்குவரது சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதோடு, எந்தவொரு சுங்கக் கட்டண முன்மொழிவுக்கும் நாங்கள் எங்கள் எதிர்ப்பை பதிவு செய்கிறோம். குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் மோசடி மையங்களுக்கு எதிரான ஒத்துழைப்பை வலுப்படுத்தநாங்கள் இணைந்து செயல்படுகிறோம். குவாட் ஆரம்பத்தில் இந்திய பெருங்கடலில் கடல்சார் கண்காணிப்பு முயற்சிகளை ஒருங்கிணைக்கும்” என்று அவர் கூறினார்.

குவாட் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு: இந்தோ - பசிபிக் கடல்சார் கண்காணிப்பு திட்டத்தை தொடங்க முடிவு
பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்: அஜ்மீர் ஷெரீப் தர்காவின் மதகுரு கோரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in