

சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் டெல்லி விமான நிலையத்தில் 3 மணி நேரமாக தடுத்து வைக்கப்பட்டதுடன் அதிகாரிகள் அவருக்கு ரூ.50,000 அபராதமும் விதித்தனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சர்வதேச உணவுப் பொருட்கள் வர்த்தக கண்காட்சி நடைபெற்றது. அதில் பஞ்சாப் மாநில தயாரிப்புகளை விளம்பரப்படுத்த அம்மாநில முதல்வர் பகவந்த் மான் பாரிஸ் சென்றிருந்தார். பயணத்தை முடித்துவிட்டு அவர் நேற்று முன்தினம் விமானம் மூலம் டெல்லி திரும்பினார்.
டெல்லி விமான நிலையத்தில் அவர் வெளியேற முயன்றபோது, சுங்க இலாகா அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தினர். பின்னர் அதிகாரிகள் சுமார் 3 மணி நேரமாக அவரது உடமைகளை சோதனையிட்டதாக கூறப்படுகிறது. இறுதியில், பகவந்த் மான் அறிவிக்கப்படாத பொருட்களைக் கொண்டு வந்ததாக கூறி அவருக்கு ரூ.50,000 அபராதம் விதித்துள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சி, இந்த சம்பவத்தை ‘பஞ்சாபியர்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம்’ எனக் கூறி கண்டித்துள்ளது. அக்கட்சியின் மாநில ஊடகப் பொறுப்பாளர் பல்டேஜ் பன்னு கூறும்போது, “இரவில் டெல்லி விமான நிலையத்தில் முதல்வர் பகவந்த் மான் வேண்டுமென்றே அவமானப்படுத்தப்பட்டு, 3 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டார்.
அதிகாரிகளே ஒப்புதல் பின்னர் ரூ.50,000 அபராதம் விதித்துள்ளனர். மேலிடத்திலிருந்து தங்களுக்கு அழுத்தம் வந்ததாக அதிகாரிகளே ஒப்புக்கொண்டனர். இச்சம்பவம் முழுவதும் மேலதிகாரிகளின் உத்தரவின் பேரிலேயே நடத்தப்பட்டது என்பதை நிரூபிக்கிறது” என குற்றம் சாட்டினார்.