

மணிப்பூர்: மணிப்பூர் மாநிலம் கோங்பால் அடிவாரப் பகுதியில்விறகு சேகரிக்கச் சென்ற 3 மைதேயி இனப் பெண்கள் ஆயுதக் குழுக்களால் கொல்லப்பட்டனர். இதைக் கண்டித்து நேற்று தொடங்கிய 48 மணி நேர மாநில அளவிலான பொது வேலைநிறுத்தம் காரணமாக இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் வாகனப் போக்குவரத்து முடங்கியதுடன், சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ள மணிப்பூர் பூர்வகுடி மக்கள் குழு (என்பிசி), இத்தாக்குதலுக்குக் காரணமான ஆயுதக் குழுக்கள் மீது உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அன்றாடப் பிழைப்புக்காகக் காடுகளுக்கும் பிற பகுதிகளுக்கும் செல்லும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து இந்தச் சம்பவம் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். முழு அடைப்பு போராட்ட்த்தில் மருத்துவ சேவைகள், வழிபாட்டுத் தலங்கள், அவசரத் தேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. ஆம்புலன்ஸ், அவசர மருத்துவ உதவிகள் தடையின்றிச் செல்ல உதவும்படி் என்பிசி வேண்டுகோள் விடுத்துள்ளது.