“போராடும் இளைஞர்கள் தேசவிரோதிகள் அல்ல” - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கருத்து

“போராடும் இளைஞர்கள் தேசவிரோதிகள் அல்ல” - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கருத்து
Updated on
1 min read

மும்பை: மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், இளைய தலைமுறையினர் குறித்து பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது: “ஜனநாயகத்தில் போராட்டம் என்பது உடன்பாட்டை எட்டுவதற்கான ஒரு வழிமுறையே தவிர, பிளவை உருவாக்குவது அல்ல. வெவ்வேறான கருத்துகள் ஒன்றாக இணைந்து, விவாதங்களுக்குப் பிறகே ஒரு ஒருமித்த முடிவு உருவாகிறது. ஜென் ஸீ இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், அவர்கள் ஒன்றும் தேசவிரோதிகள் அல்ல. அவர்கள் நமது சொந்த மக்கள், நமது அடுத்த தலைமுறையினர். இந்த உணர்வோடுதான் அவர்களுடன் உரையாட வேண்டும்.

இன்றைய புதிய தலைமுறையினரான ஜென் ஸீ மற்றும் ஜென் ஆல்ஃபா, நமது தலைமுறையை விட மிகவும் நேர்மையானவர்கள். அவர்களிடம் உண்மையான தேசபக்தியும் சேவை மனப்பான்மையும் இருக்கிறது. ஜென் ஸீ தலைமுறை கேள்விகளைக் கேட்கிறது. அவர்களுக்கு தர்க்கரீதியான பதில்களும், அதோடு அன்பும் அரவணைப்பும் தேவைப்படுகின்றன.

இந்திய கல்வி முறையில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் நிறைய உள்ளன. அவர்களின் குறைகளும் கோரிக்கைகளும் நியாயமானவை. கல்விக்கு நாட்டின் பட்ஜெட்டில் 6 சதவீத நிதியை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சரியானதுதான். கல்வி என்பது வியாபாரப் பொருள் அல்ல. சமூக ஊடகங்களில் பரவும் வன்முறையான அல்லது போலியான கருத்துகளைத் தடை செய்வது மட்டுமே தீர்வாகாது. மக்களின் மனநிலையிலும் அணுகுமுறையிலும் மாற்றம் வர வேண்டும்.

தலைமைத்துவம் என்பது மேடையில் நின்று பேசுவதோ, தேர்தலில் வெற்றி பெறுவதோ அல்ல. பின்னணியில் இருந்து இயங்கி, தனக்குப் பின் பல தலைவர்களை உருவாக்குவதே உண்மையான தலைமைத்துவம். நான் என்னை ஒரு தலைவனாகப் பார்க்கவில்லை, தொண்டனாகவே பார்க்கிறேன்.

பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளுடனான மோதல் காலங்களில் நாம் அரசின் முடிவுகளோடு நிற்க வேண்டும். ஆனால் நிரந்தரப் பகைமை என்பது எதற்கும் தீர்வாகாது. மனிதநேயம் ஒன்றே முதன்மையானது.

எல்ஜிபிடிக்யூ சமூகத்தினரும் நமது சமூகத்தின் ஒரு பகுதியினரே. அவர்களை நாம் உள்ளடக்கிச் செல்ல வேண்டும். அதேவேளையில், திருமணம் என்பது சமூகத்தின் முக்கிய அங்கமாகும். ஒரே பாலின திருமணத்தை நான் ஆதரிக்காவிட்டாலும், அவர்களின் கூடி வாழும் வாழ்க்கை முறைக்குஏற்ற அமைப்பைச் சமூகம் உருவாக்க வேண்டும்” இவ்வாறு மோகன் பாகவத் பேசினார். 

“போராடும் இளைஞர்கள் தேசவிரோதிகள் அல்ல” - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கருத்து
தொகுதி மறுசீரமைப்பு: ஆக.8-ல் தமிழக எம்.பி.க்களுடன் முதல்வர் விஜய் ஆலோசிக்க ஏற்பாடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in