

புதுடெல்லி: டெல்லியில் போராட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை காலவரையின்றி ஆக்கிரமிக்க முடியாது என்றும், மற்றவர்களின் உரிமைகளைப் பறிப்பதாக அமையக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டங்கள், தொடர்பான மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய் மால்யா பக் ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “ஒரு குழுவினர் போராட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தைத் தொடர்ந்து ஆக்கிரமித்துக் கொண்டால், மற்றவர்கள் எங்கே போராட்டம் நடத்துவது? மேலும், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் போராட்டம் நடத்த உரிமை உள்ளது.
அதே நேரத்தில், அன்றாடம் கூலி வேலை செய்து பிழைக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படக் கூடாது. போராட்டம் நடத்தும் இடங்களை காலவரையறையின்றி ஆக்கிரமித்து மற்ற அமைப்புகளின் ஜனநாயக உரிமையைப் பறிக்கக் கூடாது. போராட்டங்களுக்கு் குறிப்பிட்ட காலம் மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும்” என்றனர்.
அப்போது, “போராட்டங்களால் டெல்லி வணிகர்களுக்கு சுமார் ரூ. 2 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று வணிகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், “ஒருநாள் போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், போராட்டக்காரர்கள் 17 நாட்கள் அங்கு் இருந்தனர்” என்றார். அதற்கு நீதிபதிகள், “போராட்டம் நடத்தும் உரிமையும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியமும் சமநிலையுடன் அணுகப்பட வேண்டும்” என்றும் தெரிவித்தனர்.