

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் மற்றும் இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையர்கள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்கள், தொண்டர்களுடன் உச்ச நீதிமன்றம் நோக்கி கடந்த 12-ம் தேதி பேரணியாக சென்றனர். எஸ்ஐஆர் நடவடிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாகவும், வழக்கு தொடுக்கப் போவதாகவும் கூறி மனு தாக்கல் செய்யும் அறைக்குள் நுழைந்தனர்.
இதற்குக் கண்டனம் தெரிவித்தும், உச்ச நீதிமன்ற வளாகத்துக்குள் அரசியல் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்கக் கோரியும், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக் கோரியும் வழக்கறிஞர்கள் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கவுரவ் பாட்டியா, “உச்ச நீதிமன்றத்தில் அரசியல் தலைவர்கள் நடத்திய பேரணி வேதனை அளிக்கிறது. இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் மீது அவமதிப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
அப்போது, தலைமை நீதிபதி சூர்யகாந்த், “நீதித் துறையை யாராலும் மிரட்டி பணிய வைக்க முடியாது. வெளியில் நடக்கும் விவகாரங்கள் தெரியாத அளவுக்கு நாங்கள் மாட மாளிகைக்குள் வசிக்கவில்லை.
அரசியல் தலைவர்கள் வெளியே என்ன அறிக்கைகளை வெளியிடுகிறார்கள், நீதிமன்றத்தில் என்ன கூறுகிறார்கள் என்பதெல்லாம் எங்களுக்கு தெளிவாக தெரியும்.
தற்போதைய நிலையில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்குள் போக விரும்பவில்லை. இது தொடர்பாக ராகுல், அகிலேஷ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி தலைவர்கள் பதில் அளிக்க வேண்டும்” என நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டார்.
அதேபோன்று இந்திய தேர்தல் ஆணையம், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோருக்கும் நோட்டீஸ் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.