“ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம் ஓயாது” - ராகுல் காந்தி

“ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம் ஓயாது” - ராகுல் காந்தி
Updated on: 
2 min read

புதுடெல்லி: “தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி ஒருமித்த கருத்துடன் போராடுகிறோம். எங்களது போராட்டம் ஓயாது” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தப் போராட்டத்தின் அடுத்தகட்டம் தொடர்பாக ஆலோசிக்க காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் டெல்லி வீட்டில் கூட்டணி தலைவர்கள் இன்று மாலை கூடினர். திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளின் மூத்த தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வது குறித்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இண்டியா கூட்டணி தலைவர்களுக்கு ராகுல் காந்தி தேநீர் விருந்து அளித்தார்.

அதன்பிறகு ராகுல் காந்தி கூறும்போது, “மக்களின் அடிப்படை உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது. இதை தடுத்து ஜனநாயகத்தை காப்பாற்ற ஒன்றிணைந்து போராடுகிறோம். இது பலமுனை போராட்டம் கிடையாது, ஒற்றை போராட்டம்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி ஒருமித்த கருத்துடன் போராடுகிறோம். எங்களது போராட்டம் ஓயாது. இரண்டு ஆண்டுகள் ஆனாலும் எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம்.

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து போராடுவோம். பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களை அமைச்சர் அமித் ஷாவும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரும் அமல்படுத்தி வருகின்றனர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அழிக்க முயற்சிக்கும் யாரும் தப்பிக்க முடியாது. பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ் குமார் உள்ளிட்டோர் நீதியின் முன்பு நிறுத்தப்படுவார்கள். உச்ச நீதிமன்றம், தலைமை நீதிபதி, இந்திய நீதித் துறை மீது நாங்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

 எஸ்ஐஆர் விவகாரம் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி இண்டியா கூட்டணி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. கடந்த 6-ம் தேதி தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி நடத்தப்பட்டது.

கடந்த 7-ம் தேதி ஜந்தர் மந்தர் நோக்கி கூட்டணி தலைவர்கள் பேரணியாக சென்றனர். கடந்த 8-ம் தேதி காந்தி நினைவிடத்தில் பிரார்த்தனை நடத்தப்பட்டது.

கடந்த 9-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த இண்டியா கூட்டணி தலைவர்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி மனு அளித்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணி நடத்தப்பட்டது. இதன் இறுதியில் எஸ்ஐஆர் பணிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்த இண்டியா கூட்டணி திட்டமிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

“ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம் ஓயாது” - ராகுல் காந்தி
டெல்லி ஜந்தர் மந்தரில் தடையை மீறி போராட முயற்சி: சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in