இ20 பெட்ரோலுக்கு எதிர்ப்பு: பிரதமர் இல்லம் நோக்கிய ஆம் ஆத்மி பேரணி தடுத்து நிறுத்தம்

கேஜ்ரிவாலுக்கு பாஜக கடும் கண்டனம்
இ20 பெட்ரோலுக்கு எதிர்ப்பு: பிரதமர் இல்லம் நோக்கிய ஆம் ஆத்மி பேரணி தடுத்து நிறுத்தம்
Updated on
2 min read

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைபாளர் அரவிந்த் கேஜ்ரிவால், இ20 (20 சதவீத எத்தனால் சேர்ப்பு) பெட்ரோலை எதிர்த்து சேகரிக்கப்பட்ட 2.30 லட்சம் மனுக்களுடன் பிரதமர் மோடியின் இல்லம் நோக்கி பேரணி செல்ல முற்பட்டார். அவருடன் 100-க்கும் மேற்பட்டோர் சென்ற நிலையில், டெல்லி ஃபெரோஸ் ஷா சாலையில் பாதியிலேயே அவர்கள் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதனால் கேஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி முக்கியத் தலைவர்கள் ஜாஸ்மின் ஷா, சஞ்சய் சிங் உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக கேஜ்ரிவால் உரையாற்றுகையில், “நாம் பிரதமர் இல்லம் நோக்கிச் செல்கிறோம். நாடு முழுவதும் இருந்து 2.30 லட்சம் மக்கள் இ20 பெட்ரோலை எதிர்த்து கையெழுத்திட்ட மனுக்கள் நம்மிடம் உள்ளது.

மக்கள் இந்த பெட்ரோலால் கடும் சிரமத்துக்கு உள்ளாவதாகக் கூறியுள்ளனர். அவர்கள் உண்மையில் இந்த பெட்ரோல் பிரச்சினையில் இருந்து விடுபட வேண்டுமானால் அவர்கள் தெருக்களில் பெருமளில் திரண்டு போராட வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய டெல்லி ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சவுரவ் பரத்வாஜ், “நாம் இங்கு மனுக்களுடன் தான் வந்துள்ளோம். அவர்கள் நம்மை முன்னேறிச் செல்ல அனுமதிக்க வேண்டும். அதில் பிரச்சினை என்றால் பிரதமர் அலுவலகத்திலிருந்து யாராவது வந்து அதை பெற்றுக் கொள்ள வேண்டும். அதன் மீது ஆலோசனைகளுக்கு வாக்குறுதி அளிக்க வேண்டும். ஆனால், அவை ஏதுமில்லாது இங்கே இத்தனை பலத்த பாதுகாப்பை பார்க்கையில் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதிரடிப்படையினர், தடுப்பு வேலிகள் என்று ஆயத்தமாக இருக்கின்றனர்” என்றார்.

அதேவேளையில், பிரதமர் இல்லம் அமைந்துள்ள ஃபெரோஸ் ஷா சாலையில் 5-ம் எண் கட்டிடத்தை தாண்டி யாரையும் அனுமதிக்கக் கூடாது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்று டெல்லி காவல் துறைக்கு உத்தரவு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே அரவிந்த் கேஜ்ரிவால் இ20 பெட்ரோல் விவகாரத்தில் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு சுத்தமான அல்லது இ20 பெட்ரோலில் எது வேண்டும் என்பதை பெட்ரோல் பங்க்குகளில் அவர்களே முடிவு செய்யும் வகையில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

மேலும், “அரசு ஏன் இத்தனை நிர்பந்தம் செய்கிறது. வாகன உரிமையாளர்கள் இ20 பெட்ரோல் பற்றி புகாரளித்தும் கூட கடுமை காட்டினா, அரசு இ20-யை முன்னிறுத்துகிறது என்றே அர்த்தம். அப்படியானால் ஏன் அதை குறைந்த விலையில் விற்கக் கூடாது என்று மக்கள் வினவுகின்றனர்” என்றும் அக்கடிதத்தில் கேஜ்ரிவால் கூறியிருந்தார்.

அதுமட்டுமல்லாது, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் நெருக்கடியால் தான் மோடி அரசு இ20 பெட்ரோலை நிர்பந்திக்கிறது என்றும் கேஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாஜக எதிர்வினை:

இந்நிலையில், பாஜக தேசிய செயலர் தருண் சக் இது குறித்து முன்வைத்த விமர்சனத்தில், “இ20 பெட்ரோலை எதிர்த்து ஆம் ஆத்மி நடத்தும் போராட்டம் முட்டாள் தனமானது. கூடவே அடிப்படை ஆதாரமற்றதும் கூட. எல்லாமே அறிவியல்பூர்வமாக செய்யப்பட்டுள்ளது. இ20 பெட்ரோலை நடைமுறைக்குக் கொண்டு வருவது என்பது அரசின் முழு அங்கீகாரம் பெற்றுள்ளது. இதற்கு எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கப்படவில்லை.

எத்தனால் கலப்பை கேஜ்ரிவால் எதிர்ப்பது இந்திய விவசாயிகளின் நலனை எதிர்ப்பதாகும். எத்தனால் சோளம், கரும்பு இன்னும் பிற விவசாய உற்பத்திப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதை எதிர்ப்பதன் மூலம் விவசாயிகளை கேஜ்ரிவால் எதிர்க்கிறார். உலக நாடுகளை இதனை ஆண்டாண்டு காலமாக பயன்படுத்துகின்றன. மேலும் இந்தியாவில் அதன் பயன்பாடு அறிவியல் பூர்வமாக சோதிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

கேஜ்ரிவால் அரசியலில் தோல்வியுற்றுவிட்டார். அதனால் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி தனது அரசியல் இருப்புக்கு உயிர்கொடுக்க முயல்கிறார். அவருடைய அக்கறை தேசத்தின் மீதோ, தேச மக்களி மீதோ அல்லது வாகனங்கள் மீதோ அல்ல. அவருடைய விவாதங்களுக்கு அறிவியல்பூர்வ அடிப்படை கூட இல்லை” என்றார்.

இ20 பெட்ரோலுக்கு எதிர்ப்பு: பிரதமர் இல்லம் நோக்கிய ஆம் ஆத்மி பேரணி தடுத்து நிறுத்தம்
ஜென்ஸீ இளைஞர்களை சந்திக்கும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் - அபிஜித் தீப்கே ரியாக்‌ஷன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in