

பிராடிஸ்லாவா: ஸ்லோவேக்கியாவில் நேற்று பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அங்குள்ள பள்ளி மாணவர்கள் யோகாசனம் செய்வதை பார்வையிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் மற்றும் ஸ்லோவேக்கியாவில் 6 நாள் பயணமாக கடந்த சனிக்கிழமை டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். இப்பயணத்தில் நேற்று முன்தினம் ஸ்லோவேக்கியா சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஸ்லோவேக்கியா தலைநகர் பிராடிஸ்லாவாவில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அங்குள்ள பள்ளி மாணவர்கள் யோகா செயல்விளக்கம் நிகழ்த்தியதை பிரதமர் மோடியும் அந்நாட்டு அதிபர் பீட்டர் பெல்லெக்ரினியும் பார்வையிட்டனர்.
இது தொடர்பாக ‘எக்ஸ்' தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘‘அதிபர் பெல்லெக்ரினியும் நானும் ஸ்லோவேக்கியா பள்ளி மாணவர்களின் யோகா செயல்விளக்கத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தோம்.
சர்வதேச யோகா தினத்தை உலகமே எதிர்நோக்கிக் காத்திருக்கும் வேளையில், இளைஞர்கள் யோகாவை ஏற்றுக்கொள்வதை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நல்வாழ்வை நோக்கிய கூட்டுப் பயணத்தில், யோகா தொடர்ந்து மக்களை ஒன்றிணைப்பதை காண்பதில் மகிழ்ச்சி’’ என்று பதிவிட்டுள்ளார்.
அதிபர் மாளிகையில் வாராணசி குறித்து நடத்தப்பட்ட கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார். இக்கண்காட்சியில், சமீபத்தில் இந்தியாவின் பழமையான நகரமான வாராணசிக்கு சென்று வந்த ஸ்லோவேக்கியா கலைஞர்களின் படைப்புகளும் இடம்பெற்றிருந்தன.
மக்களுக்கும் நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் கலையும் கலாச்சாரமும் தனித்துவ ஆற்றலை கொண்டிருப்பதாக கூறிய பிரதமர் மோடி, இக்கண்காட்சியில் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்திய அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார்.
பிரதமர் மோடி இப்பயணத்தில் உற்பத்தி, போக்குவரத்து, புதிய கண்டுபிடிப்பு, முதலீடு, எரிசக்தி, உயிரி எரிபொருள், டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகள் இடையிலான ஒத்துழைப்பு குறித்து அதிபர் பெல்லெக்ரினியுடன் கலந்துரையாடினார். இரு நாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்புகளை மேம்படுத்தும் வழிகள் குறித்தும் இரு தலைவர்களும் ஆராய்ந்தனர்.
இப்பயணத்தின் மூலம் இந்தியா-ஸ்லோவாக்கியா உறவுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும், ஸ்லோவேக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோவும் பன்முகத்தன்மை மற்றும் சர்வதேச அமைப்புகளின் சீர்திருத்தங்களுக்காக தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர்.