

அசுதோஷ் தீட்சித்
புதுடெல்லி: இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக அசுதோஷ் தீட்சித் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி இந்திய விமானப் படை தளபதியாக பதவியேற்ற ஏ.பி.சிங் நேற்று ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் விமானப் படையின் 29-வது தளபதியாக அசுதோஷ் தீட்சித் நேற்று பதவியேற்றுக் கொண்டார். வரும் 2028 டிசம்பர் 31 வரை அவர் பதவியில் நீடிப்பார்.
கடந்த 1986-ம் ஆண்டில் இந்திய விமானப் படையில் தீட்சித் இணைந்தார். மிகக் குறுகிய காலத்திலேயே சிறந்த போர் விமானியாக உருவெடுத்தார்.
இதன் காரணமாக விமானப்படையில் சேர்க்கப்படும் புதிய போர் விமானங்களை சோதனை செய்யும் பொறுப்பு அவரிடம் வழங்கப்பட்டது.
சுமார் 20 வகையான போர் விமானங்களை இயக்கும் திறன் பெற்ற அசுதோஷ் தீட்சித், கார்கில் போரின்போது துணிச்சலாக செயல்பட்டு எதிரிகளின் முகாம்கள் மீது குண்டுகளை வீசினார். கடந்த மே மாதம் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை வெற்றிக்கு அசுதோஷ் தீட்சித் மிக முக்கியப் பங்காற்றினார்.
கிழக்கு பிராந்திய விமானப்படை தளபதி, மத்திய பிராந்திய தளபதி, உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகளை அவர் வகித்துள்ளார்.