

ஜெய்ப்பூர்: கடந்த 2023 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் முறையே சுகோய் 30 மற்றும் ரபேல் போர் விமானங்களில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பயணம் செய்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள விமானப் படைத் தளத்தை நேற்று வந்தடைந்த முர்மு உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பிரசந்த் ஹெலிகாப்டரில் குரூப் கேப்டன் நயான் சாந்திலால் பஹுவாவுடன் பயணம் மேற்கொண்டார்.
சுமார் 25 நிமிட பயணத்தின்போது காடிசர் ஏரி மற்றும் ஜெய்சால்மர் கோட்டை மீது ஹெலிகாப்டரில் பறந்து சென்று பீரங்கி இருந்த இலக்கை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த பயணம் குறித்து பார்வையாளர் புத்தக குறிப்பில் திரவுபதி முர்மு எழுதும்போது, ‘‘பிரசந்தில் பறந்து சென்றது எனக்கு சிறந்த அனுபவத்தை அளித்தது. இந்தப் பயணம் நாட்டின் பாதுகாப்பு திறன் மீது ஒரு புதிய பெருமையை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக இந்திய விமானப் படை மற்றும் ஜெய்சால்மர் விமானப் படை தளத்தின் குழுவுக்கு வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.