

மழலையர் பள்ளி சிசிடிவி பதிவு
மும்பை: மகாராஷ்டிராவின் சத்ரபதி சாம்பாஜி நகரில் பிரபல மழலையர் பள்ளி செயல்படுகிறது. அந்த பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் தனது 2 வயது மகனை அந்தப் பள்ளியில் சேர்த்தார்.
கடந்த 22ம் தேதி காலை 10.30 மணிக்கு வழக்கம்போல வழக்கறிஞர் தனது மகனை மழலையர் பள்ளியில் விட்டுச் சென்றார். அங்குள்ள ஓர் அறையில் ஒரு பெண் ஊழியரின் மேற்பார்வையில் வழக்கறிஞரின் மகன் உட்பட 4 குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் ஒரு குழந்தையுடன் பெண் ஊழியர் அறையில் இருந்து வெளியேறினார். மற்ற 3 குழந்தைகளும் அறையின் கதவை திறக்க முயன்றனர். அப்போது வழக்கறிஞரின் 2 வயது மகனை, சக சிறுவன் கடிக்க தொடங்கினான். வலி தாங்க முடியாமல் வழக்கறிஞரின் மகன் கதறி அழுதான். சுமார் 30 நிமிடங்களில் வழக்கறிஞரின் மகனை, சக சிறுவன் 25 முறை கடித்து குதறினான்.
பிற்பகல் 2 மணிக்கு மகனை அழைத்துச் சென்ற வழக்கறிஞர் அதிர்ச்சி அடைந்து போலீஸில் புகார் அளித்தார். இதன்பேரில் பள்ளியைச் சேர்ந்த 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை வாபஸ் பெற மழலையர் பள்ளி நிர்வாகம் சார்பில் வழக்கறிஞருக்கு ரூ.10 லட்சம் லஞ்சம் அளிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அதோடு அவரது மகனை 3 ஆண்டுகள் கட்டணம் இன்றி பராமரிக்கவும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதை வழக்கறிஞர் ஏற்க மறுத்துவிட்டார்.