“பயோடேட்டா அனுப்புங்கள்” - பங்கிபூரில் 10,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: பிரசாந்த் கிஷோர் உறுதி

“பயோடேட்டா அனுப்புங்கள்” - பங்கிபூரில் 10,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: பிரசாந்த் கிஷோர் உறுதி
Updated on
1 min read

பாட்னா: பிஹார் மாநிலம் பங்கிபூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஜன சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர், தனது தொகுதியில் உள்ள 10,000 இளைஞர்களுக்கு அடுத்த 2 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 3-ம் தேதி பெற்ற வெற்றிக்குப் பிறகு, முதன்முறையாக செவ்வாய்க்கிழமை பங்கிபூர் தொகுதிக்கு வருகை தந்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த பிரசாந்த் கிஷோர், படித்துவிட்டு வேலையின்றி இருக்கும் இளைஞர்களின் சுயவிவரக் குறிப்புகளை தனது அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். வெற்றிக்குப் பிறகு சில நாட்கள் தொகுதியில் இல்லாதது குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், "நான் எங்கும் செல்லவில்லை, உங்களுக்காகத்தான் உழைத்துக் கொண்டிருக்கிறேன்" என்று குறிப்பிட்டார்.

நாட்டில் உள்ள தொழிலதிபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுடனான தனது தொடர்புகளைப் பயன்படுத்தித் தகுதியுள்ள இளைஞர்களுக்குப் தனியார் துறையில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தரப் போவதாக அவர் உறுதியளித்தார்.

முதற்கட்டமாகச் சிலர் வேலைக்காக பிஹாருக்கு வெளியே செல்ல வேண்டியிருக்கலாம் என்றும், வரும் காலத்தில் ஜன சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இளைஞர்கள் மாநிலத்தை விட்டு வெளியேறாத வகையில் பிஹாரிலேயே வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் நீரஜ் குமார் சிங்காவை 19,324 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிரசாந்த் கிஷோர் தனது முதல் தேர்தல் வெற்றியைப் பதிவு செய்தார்.

தொகுதி மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுவதே தனது முதல் முன்னுரிமை எனக் கூறிய அவர், கல்வி, வேலைவாய்ப்பு, ரூ.1,100 மாத ஓய்வூதியம் மற்றும் இலவச உணவு தானியங்கள் ஆகியவற்றைத் தனது முதன்மை இலக்குகளாக அறிவித்துள்ளார்.

“பயோடேட்டா அனுப்புங்கள்” - பங்கிபூரில் 10,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: பிரசாந்த் கிஷோர் உறுதி
எஃப்சிஆர்ஏ மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in