

பிரசாந்த் கிஷோர்
பாட்னா: பல அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூக ஆலோசகராக இருந்தவர் பிரசாந்த் கிஷோர். இவர் ஜன் சுராஜ் என்ற கட்சியை தொடங்கி பிஹார் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் இவரது கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
இது குறித்து பிஹாரின் தர்பங்கா நகரில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: நான் பாட்னாவில் உள்ள எனது இருப்பிடத்தை மாற்றி, பாட்னா ஐஐடி அருகேயுள்ள ‘தி பிஹார் நவ் நிர்மான் ஆசிரமத்துக்கு’ வந்துள்ளேன். பிஹார் மாநிலம் அடுத்த சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் வரை நான் இங்கு தங்கியிருப்பேன்.
அடுத்த தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன். பிஹார் வாக்காளர்கள் ஜாதி, மதம் மற்றும் நிதி ஆதாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்காமல், சொந்த நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அவர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி வாக்களிக்க வேண்டும். பிரதமர் மோடி, நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ் ஆகியோரது அலையில் சிக்கக் கூடாது. பெண்கள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் ரூ.10,000 நிதிக்காக உங்கள் ஓட்டுகளை விற்கக் கூடாது. இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.