

புது டெல்லி: பிரிக்ஸ் உச்சி மாநாடுகளால் இந்தியாவுக்கு கிடைத்த பலன் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அக்கட்சியின் மற்றொரு எம்.பியான சசி தரூர், “பிரிக்ஸ் மாநாடு ராஜதந்திர ரீதியில் நாடுகளை ஒன்றிணைக்கும் இந்தியாவின் ஆற்றலுக்கு ஒரு சான்று” என்று தெரிவித்துள்ளார்.
பிரிக்ஸ் போன்ற உச்சி மாநாடுகளால் இந்தியாவுக்குக் கிடைத்த உறுதியான பலன்கள் குறித்து ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியது சலசலப்பை ஏற்படுத்தியது. அவரது கருத்துகளுக்கு பாஜக கடும் விமர்சனங்களை முன்வைத்ததுடன், வெளியுறவுக் கொள்கை விவகாரங்களில் காங்கிரஸின் அணுகுமுறை குறித்தும் கேள்வி எழுப்பியது.
இந்த நிலையில் இதுகுறித்து பேசிய சசி தரூர், " பிரிக்ஸ் போன்ற மாநாடுகள் மூலம் ‘குளோபல் சவுத்' எனப்படும் வளரும் நாடுகளுக்கு நாம் ஒரு முக்கியமான தளத்தை வழங்குகிறோம். 'குளோபல் சவுத்' என்பது 100-க்கும் மேற்பட்ட நாடுகளை உள்ளடக்கியது. இம்மாநாட்டில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 11 முக்கிய நாடுகள் பங்கேற்கின்றன. இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் தலைமை தாங்கும் இந்த நாடுகள், பல்வேறு கண்ணோட்டங்களையும் பரந்த அளவிலான நாடுகளின் பிரதிநிதித்துவத்தையும் கொண்டிருக்கின்றன.
பிரிக்ஸ் அமைப்பில் உள்ள இந்த 11 நாடுகளும் உலகின் பெரும்பான்மையான மக்கள் தொகையையும், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 41 சதவீதத்தையும் கொண்டுள்ளவை. இது சாதாரண விஷயமல்ல. உலகின் பிற நாடுகள் இதனை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டை இந்தியா நடத்துவது என்பது மிகப்பெரிய கவுரவத்திற்குரிய விஷயம். இம்மாநாட்டில் பிரிக்ஸ் உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், பார்வையாளர்களாகவும் அதிபர் மற்றும் பிரதமர் நிலையில் சுமார் 10க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் வருவது நமக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும். இது ராஜதந்திர ரீதியில் நாடுகளை ஒன்றிணைக்கும் இந்தியாவின் ஆற்றலை வெளிப்படுத்துகிறது. உலக அரங்கில் இந்த ஆற்றலுக்குத் தனி மதிப்பு உண்டு" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக இதுகுறித்து பேசிய ப.சிதம்பரம், “நமது நாட்டுக்கு வெளிநாடுகளில் இருந்து எத்தனை அதிபர்கள், பிரதமர்கள் வருகிறார்கள் என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், கடந்த இரண்டு அல்லது மூன்று பிரிக்ஸ் உச்சி மாநாடுகளால் உறுதியான பலன்களோ அல்லது குறிப்பிடத்தக்க முடிவுகளோ கிடைத்ததாக நான் கருதவில்லை.
நாம் பிரிக்ஸ், எஸ்சிஓ (SCO), ஜி20 (G20) மற்றும் குவாட் (QUAD) ஆகியவற்றில் அங்கம் வகிக்கிறோம். இவற்றால் நமக்கு என்ன பலன் கிடைக்கிறது? என்னால் அதைக் காண முடியவில்லை. கடந்த இரண்டு அல்லது மூன்று மாநாடுகளில் எந்தப் பலனையும் நான் காணவில்லை. ஆனால், முந்தைய காலங்களில் பிரிக்ஸ் உச்சி மாநாடுகள் சில உறுதியான பலன்களைத் தந்திருந்தன” என தெரிவித்திருந்தார்.
ப. சிதம்பரத்தின் இந்தக் கருத்து தொடர்பாக பதில் அளித்த பாஜக எம்.பி நளின் கோலி, “சிதம்பரத்தின் இந்தக் கருத்துகள் ஆச்சரியமளிக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் நோக்கம் என்ன? ராஜதந்திரத்தை, ஒரு வணிகப் பரிமாற்றமாகப் பார்க்க வேண்டுமா? ‘நான் உங்களுக்கு என்ன செய்தேன்? நீங்கள் எனக்கு என்ன செய்வீர்கள்?’ என்பது போன்ற அணுகுமுறையா இது?.
பிரதமர் மோடியின் அரசு செய்யும் எதையும் விமர்சிப்பதற்கு எந்தக் காரணமும் இல்லாதபோதும் கூட எப்படியாவது விமர்சிக்க வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் மற்றொரு முயற்சிதான் இது” என்று பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.