

சொவன்தேப் சட்டோபாத்யாய் மற்றும் ரிதப்ரதா பானர்ஜி
கொல்கத்தா: மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு மம்தா பானர்ஜியின் ஆதரவாளர் சொவன்தேப் சட்டோபாத்யாய்-க்கும், எதிர்தரப்பைச் சேர்ந்த ரிதப்ரதா பானர்ஜி-க்கும் இடையே போட்டி தீவிரமடைந்துள்ள நிலையில், இதில் பாஜகவுக்கு எந்த பங்கும் இல்லை என்று முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 294 தொகுதிகளில், 80 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 207 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, சுவேந்து அதிகாரி தலைமையில் ஆட்சியை அமைத்துள்ளது. இந்த தேர்தலில், மம்தா பானர்ஜி தோல்வி அடைந்ததை அடுத்து திரிணமூல் காங்கிரஸ் சார்பில் சொவன்தேப் சட்டோபாத்யாய் எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டார்.
இதனிடையே, மம்தா பானர்ஜி அதிருப்தி எம்எல்ஏக்கள் சுமார் 60 பேர், ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் அணி திரண்டுள்ளனர். இவர்கள் தாங்களே உண்மையான திரிணமூல் காங்கிரஸ் என கூறி வருகின்றனர். இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், “நாங்களே உண்மையான திரிணமூல் காங்கிரஸ் என்பதற்கு அங்கீகாரம் கோரம் கடிதம் தயாராக உள்ளது. மேற்கு வங்க சட்டமன்ற சபாநாயகர் ரதிந்திர போஸ் இடம் அந்த கடிதத்தை நாங்கள் ஒப்படைப்போம்” என தெரிவித்தார்.
இந்நிலையில், ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்கள் இன்று சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர். மேலும், மம்தா பானர்ஜி ஆதரவு எம்எல்ஏக்களும் சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர். இரு தரப்பினரும் சபாநாயகரை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் தொடர்பாக பேச திட்டமிட்டுள்ளனர்.
முன்னதாக இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிஎம்சி எம்எல்ஏ முஸ்தபிர் ரஹ்மான், “சரியான எண்ணிக்கை எங்களுக்குத் தெரியாது. ரிதப்ரதா பானர்ஜி-க்கு ஆதரவாக 59 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டுள்ளதாக நான் கேள்விப்படுகிறேன். நானும் கையெழுத்திட்டுள்ளேன்” என தெரிவித்தார்.
மற்றொரு சட்டப்பேரவை உறுப்பினரான முகமது நஜ்ருல் இஸ்லாம், “சட்டமன்றத்துக்கு நாங்கள் புதிய உறுப்பினர்கள். எங்களுக்கு நிறைய பொறுப்புகள் இருக்கின்றன. எனவே, நாங்கள் தினமும் சட்டமன்றத்துக்கு வருகை தருகிறோம். அனைவரும் மம்தா பானர்ஜியின் பக்கமே உள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் என்பது உள்கட்சி விவகாரம். யார் வேண்டுமானாலும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம். எனினும், மம்தா பானர்ஜிதான் கட்சி. நாங்கள் அனைவரும் அவர் பக்கமே நிற்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, திரிணமூல் காங்கிரஸ் சார்பில் சொவன்தேப் சட்டோபாத்யாய்க்கு ஆதரவாக சபாநாயகரிடம் அளிக்கப்பட்ட கடிதத்தில் சில சட்டமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துக்கள் போலியானவை என்ற சர்ச்சை எழுந்துள்ளது. குறிப்பாக, அந்த கடிதத்தில் சொவன்தேப் சட்டோபாத்யாயை எதிர்த்து நிற்கும் ரிதப்ரதா பந்தோபாத்யாயின் கைழுத்து உட்பட இரண்டு எம்எல்ஏக்களின் கைழுத்து போலியாக போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்த பாஜக முயல்வதாக கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி இருந்த நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சுவேந்து அதிகாரி, “திரிணாமுல் காங்கிரஸின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களான ரிதப்ரதா பானர்ஜி மற்றும் சந்திபன் சாஹா ஆகியோர் சபாநாயகரிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளனர். இதில் பாஜகவுக்கு எந்தப் பங்கும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.