பட்டு சால்வைகளுக்கு பதில் பாலியஸ்டர் சால்வைகள்: திருப்பதி தேவஸ்தானத்தில் ரூ.54 கோடி ஊழல்

பட்டு சால்வைகளுக்கு பதில் பாலியஸ்டர் சால்வைகள்: திருப்பதி தேவஸ்தானத்தில் ரூ.54 கோடி ஊழல்
Updated on
1 min read

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் 10 ஆண்டுகளாக பட்டு சால்வைக்கு பதில் பாலியஸ்டர் சால்வைகள் வழங்கியதில், ரூ.54 கோடி ஊழல் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்ததும், திருமலை திருப்பதி தேவஸ் தானத்தில் நடைபெற்ற பல ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்த வண்ணம் உள்ளன. முதலில் பிரசாதம் தயாரிக்க தரம் குறைந்த நெய்யை உபயோகித்தது தெரிய வந்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

பரகாமணியில் (உண்டியல் பணம் எண்ணுமிடம்) ரவிகுமார் எனும் ஊழியர் ரூ.100 கோடி வரை வெளிநாட்டு கரன்சிகளை திருடி சிக்கி கொண்டார். அவரிடம் ஜெகன் ஆட்சியில், தேவஸ்தான அதிகாரிகள் நீதிமன்றம் மூலம் சமரசம் செய்து கொண்டு சில சொத்துகளை பறிமுதல் செய்தனர். இதிலும் ஊழல் நடந்துள்ளது தெரிய வந்ததால், சிஐடி போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது புதிதாக ஒரு ஊழல் வெளி வந்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு முதல் தற்போது வரை ஒப்பந்த அடிப்படையில், 2 நிறுவனங்கள் மூலம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருநாமம், சங்கு, சக்கரம் பொறித்த சால்வைகளை வாங்கி வருகிறது. பட்டு சால்வை தருவதாக கூறி அந்த நிறுவனங்கள் டெண்டர் எடுத்துள்ளன.

ஒரு சால்வையின் விலை ரூ.1,300-க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முக்கிய விஐபிக்கள் சுவாமியை தரிசனம் செய்த பின்னரும், ‘வேத ஆசீர்வச்சனம்’ என அழைக்கப்படும் ரூ.3,000 டிக்கெட் வாங்கும் பக்தர்களுக்கும், கோயிலில் உள்ள ரங்க நாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள், இந்த சால்வையை போர்த்தி ஆசீர்வாதம் செய்து அனுப்பி வைப்பது வழக்கம்.

ஆனால், சால்வைகளின் தரம் குறித்து சந்தேகம் ஏற்பட்டதால் 2 இடங்களில் சோதனை நடைபெற்றது. அப்போது, தேவஸ்தானத்துக்கு வழங்கப்பட்டு வந்த சால்வைகள் பட்டுவில் செய்யப்பட்டதல்ல, பாலியஸ்டர் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் திருப்பதி தேவஸ்தானத்துக்கு இதுவரை ரூ.54 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நேற்று முதல் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதில் முறைகேடு செய்தவர்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டு சால்வைகளுக்கு பதில் பாலியஸ்டர் சால்வைகள்: திருப்பதி தேவஸ்தானத்தில் ரூ.54 கோடி ஊழல்
தலைமைத் தகவல் ஆணையரை நியமிக்க பிரதமர் மோடியுடன் ராகுல் ஆலோசனை: அமைச்சர் அமித் ஷாவும் பங்கேற்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in