

புதுடெல்லி: சிஜேபியின் மூவர்ண கொடி போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற அபிஜீத் திப்கே மற்றும் நேஹா போராவை டெல்லி காவல் துறை தடுப்பு காவலில் வைத்திருப்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சிஜேபி இன்று அறிவித்திருந்த ‘மூவர்ணக் கொடி’ போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக, தான் தங்கி இருந்த வீட்டில் இருந்து வெளியே வந்த அந்த அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கேவை டெல்லி போலீஸார் அழைத்துச் சென்று தடுப்புக் காவலில் வைத்தனர்.
இதேபோல், மாணவர் அமைப்புத் தலைவர் நேஹா போராவும் போராட்டக் களத்திலேயே தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டு, அழைத்துச் செல்லப்பட்டார். எனினும், டெல்லி போலீஸாரின் தடையை மீறி, சிஜேபியின் ‘மூவர்ணக் கொடி’ போராட்டப் பேரணி தொடர்ந்து நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இதுவரை சுமார் 150 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இயக்கம் பரவலாகும்: இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள பேரணியாக வந்த ஆம் ஆத்மி கட்சியின் கோபால் ராய் கூறுகையில், “மூவர்ணம் என்பது நமது பெருமை. மூவர்ண கொடியை அசைத்ததற்காக இரண்டு இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். அரசின் சர்வாதிகாரத்துக்கு எதிராக நாங்கள் இந்த மூவர்ணக் கொடி பேரணியை ஒருங்கிணைத்துள்ளோம்.
மாணவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் இந்தப் பேரணியை நாங்கள் நடத்துகிறோம். ஞானேஷ்குமார் பதவி விலகும் வரை இந்த இயக்கம் தொடரும். எவ்வளவுக்கு எவ்வளவு இந்த அரசு சர்வாதிகாரப் போக்குடன் செயல்படுகிறதோ அந்த அளவுக்கு இந்த இயக்கம் பரவலாகும்” என்று தெரிவித்தார்.
அரசு ஆனதைச் செய்யட்டும்: இதேபோல் எஸ்எஃப்ஐ, டிஒய்எப்ஐ, எஎஸ்ஃப்ஐ அமைப்பினருடன் சென்ட்ரல் பார்க் நோக்கி பேரணியாக வந்த சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர், ஜான் பிரிட்டாஸ், சென்ட்ரல் பார்க்கை வந்தடைந்ததும், "கன்னாட் பிளேஸ் பகுதிக்கு யாரும் செல்ல அனுமதி இல்லை என்று அவர்கள் கூறியிருந்தனர்.
ஆனால், நாங்கள் இங்கே வந்துவிட்டோம். மைய பகுதியை அடைந்துவிட்டோம். டெல்லி காவல்துறையின் தடையை மீறி, நாங்கள் இங்கே வந்துள்ளோம். மூவர்ண கொடியை உயர்த்திப் பிடித்துள்ளோம். அவர்களால் என்ன செய்ய முடியுமோ, அதைச் செய்து கொள்ளட்டும்" என்று தெரிவித்தார்.
மம்தா ஆதரவு: அபிஜீத் திப்கேவின் தடுப்பு காவலுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ‘இந்திய தேசியக் கொடியை ஏந்தியதற்காக அபிஜீத் திப்கே, தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள், சுதந்திர இந்தியாவில் நமது இளைஞர்கள், தங்களின் ஜனநாயக உரிமையை அமைதியான முறையில் நிலைநாட்டியதற்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது அறிவிக்கப்படாத அவசரநிலை இல்லாமல் வேறு என்ன? மாற்று கருத்துகளை கண்டு பயப்படும் ஒரு அரசாங்கம், ஒட்டுமொத்த தலைமுறையையும் மிரட்டி அமைதிப்படுத்த முயற்சிக்கிறது. தங்களால் கட்டுப்படுத்த முடியாத எந்த ஒரு குரலையும் பொறுத்துக் கொள்ள முடியாத பாசிச ஆட்சியின் செயல்பாடு தான் இது.
அபிஜீத்தும், அசுதோஷூம் இந்திய இளைஞர்களின் துணிச்சல், மனசாட்சி, ஆசைகளை பிரதிபலிக்கிறார்கள். இந்தக் குரலை ஒடுக்குவதன் மூலம் ஒட்டுமொத்த தலைமுறையின் குரலை உங்களால் ஒடுக்க முடியாது.
உங்கள் தீதி உங்களுடன் நிற்கிறார். எந்த ஒரு ஒடுக்கு முறையோ, சிறைபிடிப்போ, அதிகார துஷ்பிரயோகமோ ஜனநாயக உணர்வை அடக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் கேள்வி: நேஹா போரா எங்கே இருக்கிறார் எனக் கேட்டு அகில இந்திய மாணவர் அமைப்பின் உறுப்பினர் ஒருவர், எக்ஸ் தள பக்கத்தில் கேள்வி எழுப்பிய பதிவினை டேக் செய்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் தள பக்கத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
தனது பதிவில் அபிஜீத் எங்கே? நேஹா எங்கே என கேள்வி எழுப்பி இருக்கும் ஸ்டாலின், “அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரிவிக்காமல் அவர்களைக் காவலில் வைத்திருப்பது, வெளிப்படையான சட்ட விரோதச் செயல்; மனிதாபிமானமற்ற செயலுமாகும்.
மத்திய அரசு அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்; அமைதியான போராட்டங்களை ஒடுக்குவதை நிறுத்த வேண்டும். இந்த இயக்கத்தை நசுக்க மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முயற்சியும், அதை இன்னும் வலிமை அடையவே செய்யும்.
ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், மத்திய பாஜக அரசுக்கு வேறு வழியில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
நேஹாவின் பாதுகாப்பு குறித்து கேள்வி: மாணவர் அமைப்புத் தலைவர் நேஹா போரா தடுப்பு காவலில் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவரது அமைப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து நேஹாவின் பாதுகாப்புக் குறித்து எக்ஸ் தள பக்கதில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தொடர் பதிவில், 'நேஹா காவல்துறையால் தனியாக காவலில் வைக்கப்பட்டுள்ளார். நேஹா எங்கே? டெல்லி போலீஸின் இந்த வன்முறைத் தாக்குதல் நியாயம் இல்லாதது’ என்று தெரிவித்துள்ளனர். மற்றொரு பதிவில், 'நேஹா கைது செய்யப்பட்டு வைக்கப்படிருந்த வாகனத்தில் சாதாரண உடையில் இருவர் இருந்தனர்.
டெல்லி காவல்துறை எப்போது தனது படையில் வெளியில் இருந்து ஆட்களை சேர்க்க் தொடங்கியது என்று நாங்கள் அறிய விருப்புகிறோம். நேஹா பாதுகாப்பாக இருக்கிறாரா?’ எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இன்னுமொரு பதிவில், ‘நேஹா மங்லாபுரியில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பணிப்பிரிவில் (Anti-Narcotic Task Force) தனியாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இரவு மணி 8 ஆகிறது, நேஹாவிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. அவரை உடனடியாக விடுவியுங்கள்’ என்று தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என போராட்டம் நடத்தி வரும் சிஜேபி அமைப்பினர், அதன் முக்கிய நிர்வாகிகளான சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று (அக்.16) மாலை 5 மணிக்கு டெல்லி சென்ட்ரல் பார்க்கில் ‘மூவர்ணக் கொடி’ போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.