அபிஜீத் திப்கே, நேஹா போரா தடுப்புக் காவலில் கைது - டெல்லியில் தடையை மீறி சிஜேபி பேரணி

அபிஜீத் திப்கே, நேஹா போரா  தடுப்புக் காவலில் கைது - டெல்லியில் தடையை மீறி சிஜேபி பேரணி
Updated on: 
2 min read

புதுடெல்லி: சிஜேபி அறிவித்திருந்த ‘மூவர்ணக் கொடி’ போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக, தான் தங்கி இருந்த வீட்டில் இருந்து வெளியே வந்த அந்த அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கேவை டெல்லி போலீஸார் அழைத்துச் சென்று தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.

இதேபோல், மாணவர் அமைப்புத் தலைவர் நேஹாரா போராவும் போராட்டக் களத்திலேயே தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும், டெல்லி போலீஸாரின் தடையை மீறி, சிஜேபியின் ‘மூவர்ணக் கொடி’ போராட்டப் பேரணி தொடர்ந்து நடைபெற்றது.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என போராட்டம் நடத்தி வரும் சிஜேபி அமைப்பினர், அதன் முக்கிய நிர்வாகிகளான சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று (அக்.16) மாலை 5 மணிக்கு டெல்லி சென்ட்ரல் பார்க்கில் ‘மூவர்ணக் கொடி’ போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தான் தங்கி இருந்த என்சிபி (எஸ்பி) செய்தித் தொடர்பாளர் வீட்டில் இருந்து டெல்லி சென்ட்ரல் பார்க்கில் நடக்கும் போராட்டத்துக்கு கிளம்பிச் சென்ற சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கேவை தடுத்து நிறுத்திய போலீஸார், அவரை அழைத்துச் சென்று தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். அபிஜீத் திப்கே வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் அவரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்ததாக சிஜேபி செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அபிஜீத் திப்கேவை அவர் தங்கி இருந்த இல்லத்தில் சந்தித்த டெல்லி போலீஸ் அதிகாரிகள், அவரிடம் இரண்டு நோட்டீஸ்களை வழங்கி உள்ளனர். அதில் ஒன்று, சென்ட்ரல் பார்க் பகுதியில் கூடுவதற்கு தடை இருப்பதால் அவர் அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே, மூவர்ணக் கொடி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்த ஏஐஎஸ்ஏ அமைப்பினர், நேஹா போரா தலைமையில், டெல்லி மாண்டி ஹவுஸ் அருகில் இருந்து சென்ட்ரல் பார்க் நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களை போலீஸார் அங்கேயே தடுத்து நிறுத்தி, நேஹா போராவைத் தடுப்புக் காவலில் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இந் தநிலையில், போராட்டம் அறிவிக்கப்பட்ட இடத்தில் 2000-க்கும் மேற்பட்ட இளைஞகள் கூடியுள்ளனர். தடையை மீறி மூவர்ணக் கொடி பேரணியும் தொடர்ந்தது. அங்கு போலீஸாரும் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருந்தனர்.

அபிஜீத் திப்கே, நேஹா போரா  தடுப்புக் காவலில் கைது - டெல்லியில் தடையை மீறி சிஜேபி பேரணி
சிஜேபியின் ‘மூவர்ணக் கொடி’ போராட்டம்: டெல்லியில் 25,000 போலீஸார் குவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in