

கண்ணூர்: கேரளாவின் உழமலக்கால் கிராமத்தைச் சேர்ந்த நிதின் ராஜ், கண்ணூரில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் பிடிஎஸ் படித்து வந்தார். இவர் கடந்த வாரம் கல்லூரி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: ஆன்லைன் கடன் செயலி மூலம் நிதின் ராஜ் ரூ.13,500 கடன் பெற்றுள்ளார். இதற்கு அதிக வட்டி விதிக்கப்பட்டதால், ஒரே மாதத்தில் இந்த கடன் ரூ.19,000-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த 6-ம் தேதி நிதின் ராஜ் ரூ.1,000 திருப்பிச் செலுத்தியுள்ளார்.
ஆனால் கடன் கொடுத்தவர்கள் நிதின் இறப்பதற்கு முதல் நாள் 96 முறை அழைத்து பணத்தை திருப்பி செலுத்தும்படி தொந்தரவு செய்துள்ளனர். அதேநேரம் நிதின் படிக்கும் கல்லூரி பேராசிரியர் ஒருவருக்கும் 26 முறை போன் செய்து நிதினை கடனை திருப்பிச் செலுத்தும்படி கூறியுள்ளனர்.
இதனால் அவர் இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து நிதினை கல்லூரி முதல்வர் அழைத்து விசாரித்துள்ளார். அடுத்த 10-வது நிமிடத்தில் நிதின் ராஜ் மாடியிலிருந்து குதித்து இறந்துள்ளார். இவ்வாறு போலீஸார் தெரிவித்துள்ளனர்.