

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயிலில் நடந்த காணிக்கை திருட்டை உ.பி. அரசு அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரித்து வருகிறது. இதன் இடைக்கால அறிக்கை அடிப்படையில் அயோத்தி நகர காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவாகி 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் திருடிய வைரம், தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் ரொக்கப் பணம் என அனைத்தையும் மீட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருடப்பட்ட நன்கொடைகளை பயன்படுத்தி பல்வேறு சொத்துகளை குற்றவாளிகள் சேர்த்துள்ளனர். இதன் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. உ.பி.யில் கிரிமினல் பட்டியலில் இடம்பெற்ற குற்றவாளிகளின் சட்டவிரோத சொத்துகள் குண்டர் சட்டத்தின் சில பிரிவுகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன. இதே நடைமுறையை பின்பற்றி, திருடப்பட்ட காணிக்கையை மீட்டெடுக்க உ.பி. அரசு திட்டமிட்டுள்ளது. திருடப்பட்ட காணிக்கை அளவை காவல்துறை முழுமையாக கணக்கிட்டு வருகிறது. எனினும், இவை திருடத் துவங்கிய தினம் இன்னும் சரியாகத் தெரியாததால், அதன் மொத்த மதிப்பை கணக்கிடுவது எளிதல்ல எனக் கருதப்படுகிறது.
இந்த வழக்கில் கைதான 8 பேரில் ஒருவரான லவ்குஷ் மிஸ்ரா, அயோத்திக்கு அருகில் ஒரு மாளிகை கட்டி வருகிறார். ரூ.12,000 மாதச் சம்பளம் பெற்ற இவர் தன் மனைவி பெயரில் இந்த சொத்தை வாங்கி உள்ளார். இந்தக் கட்டிடத்துக்கான அரசு அனுமதிகளில் பல்வேறு குறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் குற்றவாளிகளில் முதல் நபராக லவ்குஷின் கட்டிடத்தை புல்டோசரால் இடிக்க உ.பி. அரசு முடிவு செய்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கை வழக்கமாக கடும் குற்றம் புரிந்தவர்கள் மீது எடுக்கப்படுகிறது.
காணிக்கை பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த மேலும் 5 பேரின் செயல்பாடுகள் சந்தேகத்திற்குரியதாக உள்ளது. காவல் துறையினர் அவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆதாரங்களை சரிபார்த்த பிறகு மேலும் சிலர் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பணம் எண்ணும் அறைக்கு வெளியே இருந்த சிலரின் பெயர்களும் விசாரணையில் தெரியவந்துள்ளது. நேற்று பணியில் இருந்த தனியார் பாதுகாப்புப் பணியாளர்களிடமும் காவல் குழுவினர் விசாரணை நடத்தினர்.
கோயிலின் காணிக்கை பாதுகாப்புக்காக தற்போது சிஆர்பிஎப் மற்றும் மாநில பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களது முழுமையான ஒழுங்குமுறையை உறுதி செய்வதற்காக, ஒவ்வொரு 15 நாட்களுக்கும் அனைத்து அதிகாரிகள் மற்றும் வீரர்களின் பணியிடங்கள் மாற்றப்படுகின்றன. இதுவரை பின்பற்றப்படாத இந்த நடைமுறையால்தான் ராமர் கோயிலில் மிகப்பெரிய தவறு நடைபெற்றுள்ளது.
இச்சூழலில் ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகிகளான சம்பக் ராய், அனில் மிஸ்ரா, கோபால் ராவ் மீது அயோத்தி வழக்கறிஞர்கள் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்திருந்தனர். இதற்கான புகாரை நேற்று அயோத்தி நகரக் காவல் நிலையத்தில் அளித்துள்ளனர்.