

போபால்: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஆண்டு மகா கும்பமேளா நடைபெற்றது. இதில் மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தைச் சேர்ந்த மோனலிசா, மணிகள் விற்பனை செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி மக்களின் இதயங்களைக் கவர்ந்தார்.
இந்நிலையில் மோனலிசா, பர்மன் கான் என்பவரை கடந்த மார்ச் 11-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இது மதம் கடந்த திருமணமாக பார்க்கப்பட்டாலும், மோனலிசாவின் வயது குறித்து புகார் எழுந்தது.
இந்நிலையில், தேசிய பழங்குடியினர் ஆணையம் நடத்திய விசாரணையில், திருமணத்தின் போது மோனலிசா சட்டப்பூர்வ வயதை அடையாதவர் (மைனர்) என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மத்தியப் பிரதேசத்தின் மகேஷ்வர் காவல் நிலையத்தில் பர்மன் கான் மீது போக்சோ சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) மற்றும் எஸ்சி/எஸ்டி (வன்கொடுமைத் தடுப்பு) சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என்சிஎஸ்டி தலைவர் அந்தர் சிங் ஆர்யா தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில், மோனலிசா ‘பார்த்தி' பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் மருத்துவமனை பதிவுகளின்படி, அவர் டிசம்பர் 30, 2009 அன்று பிறந்தார் என்பதும் உறுதி செய்யப்பட்டது. திருமணத்தின் போது அவருக்கு 16 வயது மட்டுமே ஆகியிருந்தது தெரியவந்துள்ளது.
மோனலிசா திருமணம் கேரளாவில் உள்ள ஒரு உள்ளூர் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் போலியான ஆவணங்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. தம்பதியினர் வழங்கிய ஆதார் விவரங்களை நம்பியதாக திருமணம் நடந்த கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.