

புதுடெல்லி: நாடாளுமன்றத்தை முடக்கும் நாடகங்களை விடுத்து, எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்திய நிலையில், அவரது கருத்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளரும் வயநாடு தொகுதி எம்.பி.யுமான பிரியங்கா காந்தி வதேரா பதிலடி கொடுத்துள்ளார்.
பிரதமரின் கருத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி வதேரா, "தேர்தல் நடைபெற்ற விதம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், காற்று மாசு போன்றவை மிகப் பெரிய பிரச்சினைகள். இவை விவாதிக்கப்பட வேண்டும். நாடாளுமன்றம் வேறு எதற்கு? இது நாடகம் அல்ல. பிரச்சினைகளைப் பற்றி பேசுவதும் எழுப்புவதும் நாடகம் அல்ல.
மக்கள் நலன் சார்ந்த முக்கிய பிரச்சினைகள் குறித்து ஜனநாயகப்பூர்வமாக விவாதிக்க நாடகம் அனுமதிப்பதில்லை" என தெரிவித்தார்.
பிரதமர் என்ன கூறினார்? - நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று கூடிய நிலையில், அதில் பங்கேற்பதற்காக நாடாளுமன்றம் வந்த பிரதமர் மோடி, வளாகத்துக்கு வெளியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "இந்தியா ஜனநாயக நாடு. ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை வலுப்பெற்று வருவதற்கான அடையாளம் தான் பிஹார் தேர்தல் வெற்றி. அதில் பெண்களின் பங்களிப்பு அளப்பரியது.
பிஹார் தேர்தல் தோல்வி தந்த அழுத்தத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் மீண்டு வர வேண்டும். வெற்றியின் ஆணவத்தையும், தோல்வியின் விரக்தியையும் வெளிப்படுத்தும் இடமல்ல நாடாளுமன்றம்.
எனவே, எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தை முடக்கி நாடகங்கள் நடத்துவதைத் தவிர்த்து, ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும். மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். நாட்டுக்காக நாம் செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றி விவாதிக்க வேண்டிய இடம்தான் நாடாளுமன்றம்.
நாட்டின் வளர்ச்சியே முதன்மையானது. நமது பொருளாதார வளர்ச்சி புதிய நம்பிக்கை தந்துள்ளது. இந்தக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழப்பு மிகவும் அவசியம். கூட்டத்தொடரில், இளம் எம்.பி.க்கள், முதன்முறை எம்.பி.க்கள் அவையில் அதிகமாக பேச வேண்டும். அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்" என தெரிவித்தார்.