மாநிலங்களவையில் ஜக்தீப் தன்கர் விவகாரத்தை எழுப்பிய கார்கே: பாஜக எதிர்ப்பு

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

Updated on
2 min read

புதுடெல்லி: மாநிலங்களவைத் தலைவராக இருந்த ஜக்தீப் தன்கருக்கு பிரிவு உபசாரம் செய்வதற்கான வாய்ப்பு சபைக்கு கிடைக்காதது குறித்து மனம் வருந்துவதாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்தது.

மாநிலங்களவையின் புதிய தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று தனது பணியை தொடங்கிய நிலையில், பிரதமர் மோடி, மாநிலங்களவைத் துணைத்தலைவர் ஹரிவன்ஷ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் அவருக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து உரையாற்றினர்.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது உரையில், “மாநிலங்களவைத் தலைவராகப் பணியைத் தொடங்கும் உங்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் இதயப்பூர்வ வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்தில், நாட்டின் முதல் மாநிலங்களவைத் தலைவராகத் திகழ்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் கூறியவதை நினைவுகூற விரும்புகிறேன். அவர் 1952ல் இந்த அவையில் பேசும்போது, “நான் எந்த ஒரு கட்சியையும் சார்ந்தவன் அல்ல, நான் ஒவ்வொரு கட்சியையும் சார்ந்தவன்” என கூறினார். ஆனால், இங்கே பேசியவர் (பிரதமர் மோடி) உங்களைத் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர் என கூறினார்.

நீங்கள் எந்த கட்சியையும் சார்ந்தவராக இருக்கக்கூடாது. அனைத்துக் கட்சிகளுக்கும் உரிய வாய்ப்புகளை வழங்க வேண்டும். உங்களுக்கு முன் இந்த அவையின் தலைவராக இருந்தவர் (ஜக்தீப் தன்கர்), முற்றிலும் எதிர்பாராத வகையில் திடீரென வெளியேறினார். நாடாளுமன்ற வரலாற்றில் முன்னெப்போதும் அதுபோல் நிகழ்ந்ததில்லை.

அவைத் தலைவர் என்பவர் அவையின் பாதுகாவலர். அவர் அரசாங்கத்துக்கு மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளுக்கும் சொந்தமானவர். ஆனால், அவருக்கு பிரவு உபசாரம் செய்வதற்கான வாய்ப்பு சபைக்கு கிடைக்காதது குறித்து வருந்துகிறேன்.(பாஜக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். அவைத் தலைவர் அவர்களை சமாதானப்படுத்தி அமர வைத்தார்.) அவருக்கு எனது நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் அவையின் அனைத்துப் பிரிவினரையும் கவனித்துக் கொள்வீர்கள், எதிர்க்கட்சிகளையும் ஆளும் கட்சியையும் சமமாக நடத்துவீர்கள் என நம்புகிறேன்.” என தெரிவித்தார்.

மல்லிகார்ஜுன கார்கேவின் உரையை அடுத்து, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவை அவைத் தலைவர் பேச அழைத்தார். அப்போது பேசிய கிரண் ரிஜிஜு, “புதிய அவைத் தலைவருக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டிய, வரவேற்க வேண்டிய நிகழ்வு இது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் கார்கே, தேவையின்றி ஜக்தீப் தன்கர் விவகாரத்தை எழுப்பியுள்ளார். இதன்மூலம் அவர் முந்தைய அவைத் தலைவரை அவமதித்துள்ளார். தொடர்பில்லாத விஷயங்களை அவையில் எழுப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.” என தெரிவித்தார்.

முன்னாள் மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் குறித்து மல்லிகார்ஜுன கார்கே பேசியது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது. அப்போது அவையில் இருந்த பிரதமர் மோடி, கார்கே பேசியதை முழுமையாகக் கேட்டார். பின்னர், அதற்கு பதில் அளிக்கும் வகையில் கிரண் ரிஜிஜு பேசியதையும் முழுமையாகக் கேட்டார். அதன் பின்னர் அவையில் இருந்து அவர் புறப்பட்டுச் சென்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in