

குவாஹாட்டி: அசாமில் 2 நாள் பயணமாக இன்று வரும் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
இன்று காலை மேற்கு வங்க மாநிலத்தின் நாடியா மாவட்டத்தில் ரூ.3,200 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
அப்போது, பரஜாகுலி - கிருஷ்ணா நகர் பகுதியில் என்எச்-34 வழித்தடத்தில் 66.7 கி.மீ. தூரத்துக்கு அமைக் கப்பட்டுள்ள 4 வழிச் சாலையை தொடங்கி வைக்கிறார். பின்னர் அசாம் மாநிலத்துக்கு பிற்பகல் 2.30 மணிக்கு செல்கிறார்.
குவாஹாட்டி விமான நிலையம் வந்தடையும் பிரதமரை, முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா உட்பட முக்கிய பிரமுகர்கள் வரவேற்கின்றனர்.
பின்னர் ரூ.4,000 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய லோக்பிரியா கோபிநாத் பார்டோலாய் (எல்ஜிபிஐ) சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்து 15 நிமிடங்கள் சுற்றிப் பார்க்கிறார். இந்த விமான நிலையத்தின் வெளியில் அசாம் மாநிலத்தின் முதல் முதல்வர் கோபிநாத் பார்டோலாயின் 80 அடி உயர உருவச் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.
பின்னர் பஷிஸ்தா பகுதியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார். நாளை ஞாயிற்றுக்கிழமை மாணவர்களுடன் கலந்துரையாடல், பிரம்மபுத்ரா நதியில் கப்பலில் பயணம் போன்ற நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு டெல்லி திரும்புகிறார்.