

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக வரும் டிசம்பர் 11-ம் தேதி கனடா செல்ல உள்ளார். கனடாவின் ஒட்டாவா நகரில் உள்ள இந்தியத் தூதரகம் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி, டிசம்பர் 11-12 தேதிகளில் கனடாவுக்குப் பயணம் மேற்கொள்வார்.
பிரதமர் மோடியும் கனடா பிரதமர் மார்க் கார்னியும் சமீபத்தில் தொலைபேசியில் உரையாடினர். அப்போது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள நேர்மறையான உத்வேகத்தைத் தொடர இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். மேலும் வர்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் மக்கள் இடையேயான உறவுகள் ஆகியவற்றில் உறுதியான பலன்களை அடைய பாடுபடுவது என்றும் ஒப்புக் கொண்டனர்” என கூறப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் இந்தப் பயண தேதியை கனடா பிரதமர் மார்க் கார்னியும் உறுதிப்படுத்தி உள்ளார். இந்த இரு நாள் பயணத்தின்போது, பிரதமர் மோடி ஒட்டாவா மற்றும் டொராண்டோ ஆகிய நகரங்களுக்குச் செல்வார் என்றும் அங்கு அவர் இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இருதரப்பு உறவில் முன்னேற்றம்
ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக இருந்தபோது, கனடா, இந்தியா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. மார்க் கார்னி பிரதமரான பிறகு இருதரப்பு உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்தான் பிரதமர் மோடி அங்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.