

புதுடெல்லி: குஜராத்தின் சோமநாதர் கோயில், ஆயிரம் ஆண்டுகளின் அணையாத நம்பிக்கை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் கிர்சோம்நாத் மாவட்டம், பிரபாச பட்டினம் கடற்கரையில் சோமநாதர் கோயில் அமைந்துள்ளது. ஆப்கானிஸ்தானின் கஜினி நகரை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த கஜினி முகமது கடந்த 1026-ம் ஆண்டு சோமநாதர் கோயில் மீது தாக்குதல் நடத்தி ஏராளமான செல்வங்களை கொள்ளையடித்து சென்றார்.
அதன்பிறகு முகலாய ஆட்சியாளர்களால் சோமநாதர் கோயில் பலமுறை தாக்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், முதல் துணை பிரதமர் சர்தார் வல்லபபாய் படேலின் முயற்சியால் சோமநாதர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டது.
கஜினி முகமதுவின் தாக்குதலுக்கு பிறகு ஆயிரம் ஆண்டுகளை கடந்து சோமநாதர் கோயில் கம்பீரமாக நிற்கிறது. இதை நினைவுகூரும் வகையில் சோமநாதர் சுயமரியாதை பெருவிழா என்ற பெயரில் வரும் 8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை சோமநாதர் கோயிலில் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெற உள்ளன. 11-ம் தேதி நடைபெறும் பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது இணைய பக்கத்தில் நேற்று வெளியிட்ட கட்டுரையில் கூறியிருப்பதாவது: கடந்த காலங்களில் துரதிஷ்டவசமாக சோமநாதர் கோயில் வெளிநாட்டுப் படையெடுப்பாளர்களால் தாக்கப்பட்டது.
இந்த மாபெரும் புண்ணியத் தலத்தின் மீது முதல் தாக்குதல் நடத்தப்பட்டு 1,000 ஆண்டுகள் ஆகிறது. 1026-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில்தான் கோயில் மீது கஜினி முகமது தாக்குதல் நடத்தினார். வன்முறை மிகுந்த, கொடூரமான படையெடுப்பின் மூலம் இந்தியாவின் நம்பிக்கை, நாகரிகத்தை பறைசாற்றும் மாபெரும் கலாச்சார சின்னத்தை அழிக்க அவர் முயன்றார்.
எனினும் சோமநாதர் கோயிலை அதன் பழைய பெருமையோடு மீட்டெடுக்க எண்ணற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் இந்த கோயில் முன்பைவிடவும் இப்போது பொலிவுடன் நிற்கிறது. கடந்த 1951-ம் ஆண்டு மே 11-ம் தேதி அப்போதைய குடியரசுத்தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் முன்னிலையில் புதுப்பிக்கப்பட்ட கோயில் திறக்கப்பட்டது.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு சோமநாதர் கோயிலை மீண்டும் கட்டி எழுப்பும் புனிதமான கடமை சர்தார் வல்லபபாய் படேலின் கைகளுக்குச் சென்று சேர்ந்தது. இந்த கோயிலை கட்ட அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆர்வம் காட்டவில்லை. புனரமைக்கப்பட்ட கோயிலின் திறப்பு விழாவில் குடியரசுத் தலைவரும் அமைச்சர்களும் பங்கேற்பதைகூட நேரு விரும்பவில்லை. இந்த நிகழ்வு இந்தியா பற்றி ஒரு தவறான எண்ணத்தை உருவாக்கும் என்று அவர் கூறினார். ஆனால் அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் மிகவும் உறுதியாக இருந்து கோயில் திறப்பு விழாவில் பங்கேற்றார்.
சோமநாதர் கோயில், ஆயிரம் ஆண்டுகளின் அணையாத நம்பிக்கை ஆகும். சோமநாதரின் ஆசியுடன் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற லட்சியத்தை நோக்கி பயணிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.