

புதுடெல்லி: மேற்காசிய போரால் எழுந்துள்ள நெருக்கடி தொடர்பாகப் பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
மேற்காசிய போர் (அமெரிக்கா - ஈரான் போர்) காரணமாக உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. ஈரானை ஒட்டிய ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு கச்சா எண்ணெய், எரிவாயு போக்குவரத்து முடங்கி உள்ளது. இதன் எதிர்விளைவாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது.
இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 60 சதவீதத்தை வளைகுடா நாடுகள் பூர்த்தி செய்து வந்தன. ஹார்முஸ் ஜலசந்தி மூடலால் வெனிசுலா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து கூடுதல் விலைக்கு இந்திய நிறுவனங்கள் கச்சா எண்ணெய்யை வாங்கி வருகின்றன.
உரங்கள் உற்பத்திக்கு இயற்கை எரிவாயு மிகவும் அவசியம். எரிவாயு தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் உரங்களின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டு உள்ளது. உரங்கள் உற்பத்திக்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதும் சிக்கலாகி உள்ளது.
இந்தியாவின் சமையல் எண்ணெய் தேவையில் சுமார் 65 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதேபோல தங்கத்தின் தேவையில் சுமார் 90 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய், எரிவாயு, தங்கம் மற்றும் சமையல் எண்ணெய்யை அமெரிக்க டாலரை கொடுத்து மட்டுமே வாங்க முடியும். சமீபத்திய புள்ளிவிவர நிலவரத்தின்படி இந்தியாவிடம் 682.3 பில்லியன் அமெரிக்க டாலர் உள்ளது.
இந்த தொகையின் மூலம் இந்தியாவின் 11 மாதங்களுக்கான இறக்குமதி தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். ஆனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்து வருவதால் இந்தியாவின் டாலர் கையிருப்பு கணிசமாக குறைந்து வருகிறது.
இதை கருத்தில் கொண்டே ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி அண்மையில் அழைப்பு விடுத்தார். மேலும் விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டும். பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். சமையல் எண்ணெய் பயன்பாட்டை 10 சதவீதம் குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
சமீபத்திய பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வணிக சமையல் காஸ் விலை உயர்வு காரணமாக நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவு வகைகளின் விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இந்தச் சூழலில் மேற்காசிய போரால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள், இவற்றை எதிர்கொள்ள மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பொருளாதார ஆலோசனைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவுரைகளை வழங்கும் பொருளாதார ஆலோசனைக் குழுவில் 3 நிரந்தர உறுப்பினர்களும், 11 பகுதி நேர உறுப்பினர்களும் உள்ளனர். குழுவின் தலைவர் மகேந்திர தேவ் உட்பட அனைத்து உறுப்பினர்களும் நேற்றைய கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் தற்போதைய சூழலுக்கு ஏற்ப புதிய பொருளாதாரக் கொள்கைகள் வரையறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வது, புதிதாக தொழில் தொடங்க ஏதுவான சூழலை உருவாக்குவது, அந்நிய முதலீடுகளை அதிகளவில் ஈர்ப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் மத்திய அரசு சார்பில் விரைவில் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.