“மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றியே தீருவோம்”: பிரதமர் மோடி

“மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றியே தீருவோம்”: பிரதமர் மோடி
Updated on: 
1 min read

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையிலும், மாநில சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அளிப்பதற்கான மகளிர் இட ஒதுக்கீட்டு திருத்த மசோதா நிறைவேற்றப்படுவதில் தங்களுக்கு இருக்கும் உறுதிப்பாடு அசைக்க முடியாதது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாளை கூட உள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில், தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ஆகியவை தாக்கல் செய்யப்பட உள்ளன.

தொகுதி மறுவரையறை மசோதாவையும் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவையும் இணைத்து நடைமுறைப்படுத்த உள்ள மத்திய அரசின் திட்டத்துக்கு இண்டியா கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாக திமுக அறிவித்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து, முடிவை மறு பரிசீலனை செய்ய கோரிக்கை விடுப்பதற்காக இண்டியா கூட்டணியின் தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் சென்னை வந்துள்ளனர். அவர்கள், மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து சமாதானப்படுத்த உள்ளனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, மீண்டும் இன்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நாட்டின் அரசியலமைப்பில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்வதற்கான போராட்டம் பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. பல ஆண்டுகளாக, இதற்காகப் பாடுபட்டவர்களில் நானும் ஒருவன். பெண்களை அதிகாரப்படுத்துவதில் பாஜகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் கூடுதல் உறுதியுடன் உள்ளன.

எங்களைப் பொறுத்தவரை, தேசிய நலனே மிகவும் உயர்ந்தது. ஆனால், சிலருக்குத் தங்கள் கட்சியின் நலன்களே அனைத்தையும் விட, ஏன் தேசிய நலனை விடவும் மேலானதாக உள்ளது. இதனால், ​​பெண்களுக்கு அதிகாரமளிப்பதும், தேசிய நலனும் பாதிக்கப்படுகின்றன.

மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா காலத்தின் கட்டாயம். எங்கள் உறுதிப்பாடு அசைக்க முடியாதது. மக்கள் தொகையில் பாதியினரின் கனவுகளுக்காகவும், நம் நாட்டின் எதிர்காலத்திற்காகவும், இந்த வாக்குறுதியை நாம் நிறைவேற்றியே தீர வேண்டும்!” என்று தெரிவித்துள்ளார்.

“மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றியே தீருவோம்”: பிரதமர் மோடி
சென்னை வந்தனர் இண்டியா கூட்டணி தலைவர்கள் - திமுக எம்.பிக்களுடன் ஸ்டாலின் தீவிர ஆலோசனை

X