

குவாஹாட்டி: அசாம் மாநிலத்தில் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, கின்னஸ் சாதனைக்காக 10,000 போடோ பழங்குடியினர் பங்கேற்கும் பகுரும்பா நடனத்தை பார்வையிட்டார்.
அசாம் மாநிலத்துக்கு 2 நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி நேற்று மாலை வந்தார். இங்கு கின்னஸ் சாதனைக்காக போடோ பழங்குடியின கலைஞர்கள் 10,000 பேர் பங்கேற்ற பகுரும்பா நடனம், குவாஹாட்டி நகரில் உள்ள அர்ஜுன் போகேஸ்வர் பரூவா விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இதை பிரதமர் மோடி பார்வையிட்டார். அசாம் ஆளுநர் லட்சுமன் பிரசாத் ஆச்சார்யா, மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகியோரும் பிரதமர் மோடியுடன் இந்த நடனத்தை பார்வையிட்டனர்.
குவாஹாட்டி நகரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நேற்று இரவு தங்கிய பிரதமர் மோடி, இன்று காலை கலியாபோர் செல்கிறார். இங்கு ரூ.6,957 கோடி மதிப்பில் காசி ரங்கா தேசிய பூங்காவின் விரிவாக்க பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
மேலும் திப்ரூகர் - கோமதி நகர் (லக்னோ) மற்றும் காமக்யா - ரோத்தக் ஆகிய வழித்தடங்களில் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.