

புதுடெல்லி: உங்கள் பணம், உங்கள் உரிமை இயக்கத்தில் பங்கேற்று உரிமை கோரப்படாத பணத்தை மீட்டுக்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை, பரஸ்பர நிதி நிறுவனங்களில், பல ஆயிரம் கோடி ரூபாய் பல்வேறு காரணங்களால் பொதுமக்களால் நீண்ட காலமாக உரிமை கோரப்படாமல் உள்ளது. இந்தத் தொகையை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்காக ‘உங்கள் பணம், உங்கள் உரிமை இயக்கம்' கடந்த அக்டோபரில் தொடங்கப்பட்டது.
இதுகுறித்து லிங்க்டு இன் சமூக வலைதளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ”நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் ரூ.78 ஆயிரம் கோடியும் காப்பீட்டு நிறுவனங்களில் ரூ.14 ஆயிரம் கோடியும், பரஸ்பர நிதி நிறுவனங்களில் ரூ.3 ஆயிரம் கோடியும் பங்கு ஈவுத் தொகையாக ரூ.9,000 கோடியும் உரிமை கோரப்படாமல் உள்ளன.
கடினமாக உழைத்து சம்பாதித்து சேமித்த இந்த தொகையை ஒவ்வொரு குடிமகனும் மீண்டும் பெற முடியும் என்பதை உறுதிப்படுத்தவே ‘உங்கள் பணம், உங்கள் உரிமை இயக்கம்' தொடங்கப்பட்டுள்ளது. இந்த செயல் முறையை எளிமையாகவும் வெளிப்படையாகவும் மாற்ற இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய காப்பீட்டு ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ), இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) மற்றும் மத்திய பெரு நிறுவன விவகார அமைச்சகத்தால் தனித்தனி இணையதளங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும், உரிமை கோராத தொகையை மீட்பதற்காக, நாடு முழுவதும் தொலைதூர கிராமங்கள் உட்பட 477 மாவட்டங்களில் ஏற்கெனவே முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்கள் பெயரிலோ அல்லது தங்கள் குடும்பத்தினர் பெயரிலோ உரிமை கோரப்படாத தொகை ஏதேனும் இருக்கிறதா என சரிபார்த்து, உரிமை கோரப்படாத முதலீடு இருந்தால் அதை மீட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.