

தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு விண்வெளித் துறை சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். படம்: பிடிஐ
புதுடெல்லி: “இந்திய விண்வெளித் துறை காந்தம் போன்று முதலீடுகளை ஈர்க்க வேண்டும்’’ என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
கடந்த 2023 ஆகஸ்ட் 23-ம் தேதி சந்திரயான்-3 விண்கலம், நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. அதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. அதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 23-ம் தேதி, தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
அதன்படி ஆகஸ்ட் 23-ம் தேதி நேற்று தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி தனது சமூகவலைதளப் பக்கத்தில் நேற்றுவெளியிட்ட பதிவில், ‘‘அனைவருக்கும் தேசிய விண்வெளி தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் பெரிய கனவுகளைக் காண்போம். மேலும் புதுமைகளைப் புகுத்துவோம். புதிய எல்லைகளைத் தொடுவோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் விண்வெளி துறை சார்ந்த 20 ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் (சிஇஓ) பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை கலந்துரையாடினார். அந்தக் கலந்துரையாடல் வீடியோ நேற்று வெளியிடப்பட்டது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதாவது: விண்வெளித் துறை தனியாருக்குத் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்தத் துறையில் இளம் தலைமுறையினர் துணிச்சலாகக் களமிறங்கி உள்ளனர். இந்திய அரசுமீது நீங்கள் நம்பிக்கை வைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல அரசும் உங்கள் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறது. நாம் ஒன்றிணைந்து புதிய சாதனைகளைப் படைப்போம்.
இந்திய விண்வெளித் துறை, காந்தம் போன்று முதலீடுகள் மற்றும் முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டும். விண்வெளித் துறை சார்ந்த நிபுணர்களையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கவர்ந்திழுக்க வேண்டும். இத்துறையில் ஆர்வம் உள்ள இந்திய வம்சாவளி இளைஞர்கள் இந்தியாவுக்குத் திரும்பி வரலாம்.
இங்குள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் இணைந்து தங்கள் திறமையை உலகுக்கு நிரூபிக்கலாம். விண்வெளித் துறை சார்ந்தநிறுவனங்களுக்கும் பிற துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கும் இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும். விண்வெளி குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் இணைந்து செயல்படலாம்.
வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் வேளாண் துறைகளுடன் இணைந்து விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செயல்படலாம். விவசாயிகளுக்குத் தேவையான தகவல்களை வழங்கி, விளைச்சலை அதிகரிக்க செய்யலாம். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவன சிஇஓ பவன் குமார் சந்தனா பேசும்போது, “கடந்த ஜூலை 18-ம் தேதி இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அடுத்த ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் ஒரு ராக்கெட்டை விண்ணில் செலுத்த ஸ்கைரூட் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. அடுத்த கட்டமாக ஒரு வாரத்துக்கு ஒரு ராக்கெட்டை விண்ணில் செலுத்துவோம்’’ என்றார்.
விண்ணில் மருந்து தயாரிப்பு: செரன்டிபிட்டி ஸ்பேஸ் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் சார்பில் விண்வெளியில் மருந்துகளை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் சிஇஓ அந்தரிஷ் பரிச்சா கூறும்போது, “மருந்துகளைத் தயாரிக்கும் போது புவிஈர்ப்பு விசை காரணமாக ரசாயனங்கள், புரதங்கள் ஒன்றிணைவதில் பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன. விண்வெளியில் ஈர்ப்பு விசை கிடையாது. அங்கு ரசாயனங்கள், புரதங்கள் மிகவும் நேர்த்தியாக ஒன்று சேரும். இதை அடிப்படையாக வைத்து விண்வெளியில் மருந்துகளைத் தயாரித்து பூமிக்குக் கொண்டு வருவோம்" என்றார்.
பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் சிஇஓக்கள், விண்வெளித் துறை சார்ந்த தங்களது லட்சியங்களைப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பகிர்ந்து கொண்டனர்.
கேம்பிரிட்ஜ் பல்கலை. ஆய்வு தகவலுக்கு இஸ்ரோ மறுப்பு
உலக நாடுகளைவிட குறைந்த செலவில் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும் நாடு இந்தியா என்ற கருத்து உள்ளது. இந்நிலையில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் போலிடெக்னிகோ டி டோரினோ அமைப்பின் பொருளியல் வல்லுநர்கள்வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒரு கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை, தாழ் புவி வட்டப்பாதைக்கு அனுப்ப இந்தியாவுக்கு 13,302 அமெரிக்க டாலர் செலவாகிறது.
இது உலகின் முக்கிய விண்வெளி அமைப்புகளின் செலவுடன் ஒப்பிடுகையில் மிக அதிகம். அமெரிக்காவில் இதற்கான செலவு 3,225 டாலர். ஜப்பானில் 5,287, சீனாவில் 5,809, ரஷ்யாவில் 6,682, ஐரோப்பாவில் 9,897 டாலராகஉள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் டாக்டர் வி.நாராயணன் கூறுகையில், ‘‘தவறான தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவுகள் உள்ளதால் அது நிராகரிப்பட வேண்டியது’’ என்றார். இஸ்ரோ முன்னாள் தலைவர் எஸ்.சோமநாத் கூறுகையில், ‘‘ஒரு கிலோ செலவை மட்டும் அடிப்படையாக வைத்து விண்வெளி ஏவுதலின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை முழுமையாக மதிப்பிட முடியாது’’ என்றார்.