

புதுடெல்லி: டெல்லியில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் மாநாட்டை, ஜன.15-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டன், கனடா, இந்தியா உட்பட 56 நாடுகள் அங்கம் வகிக்கும், காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் அமைப்பை, கடந்த 1969-ம் ஆண்டு கனடாவின் அப்போதைய சபாநாயகர் லுசியன் லாமரெக்ஸ் உருவாக்கினார். சபாநாயகர்கள், அவைத் தலைவர்கள் நாடாளுமன்றத்தை பாரபட்சமின்றி நடத்துவது, நேர்மையாக நடத்துவதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஆண்டு பிரான்ஸ் கடல் பகுதியில் அமைந்துள்ள குரென்சீ தீவில் காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் மாநாட்டு நடைபெற்றது. அதில் பங்கேற்ற இந்திய சபாநாயகர் ஓம் பிர்லா, 2026-ல் நடைபெறும் மாநாட்டில் முக்கிய செயற்கை நுண்ணறிவை நாடாளுமன்றத்தில் பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும் என்று பேசியிருந்தார்.
இந்நிலையில், 28-வது காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் மாநாடு, டெல்லியில் உள்ள சம்விதான் சதனில் (பழைய நாடாளுமன்ற கட்டிடம்) உள்ள மைய மண்டபத்தில் 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடத்த சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்பாடு செய்துள்ளார். இந்த மாநாட்டை பிரதமர் மோடி ஜன.15-ம் தேதி தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் ‘நாடாளுமன்றத்தில் ஏஐ: சமமான புதுமைகள்’, ‘சமூக ஊடகங்கள் மற்றம் நாடாளுமன்ற பிரதிநிதிகள் மீது அவற்றின் தாக்கம்’, ‘பாதுகாப்பு, உடல்நலம், நாடாளுமன்ற பிரதிநிதிகள் மற்றும் ஊழியர்களின் நல்வாழ்வு’ போன்ற தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற உள்ளன.
முக்கியமாக, ‘ஜனநாயகத்தின் கோயிலாக விளங்கும் நாடாளுமன்றத்தின் சபாநாயகர்கள் பங்கு’ என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.