

கோப்புப்படம்
புதுடெல்லி: மனிதர்களுக்கு ஏற்படும் ரேபிஸ் பாதிப்பை நோயாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் பங்கஜ் குமார் சிங் கூறியதாவது:
தெருநாய்கள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது. குறிப்பாக வெறிநாய் கடியால் மனிதர்களுக்கு ரேபிஸ் நோய் பரவுவதை தடுக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் ஒரு பகுதியாக மனிதர்களுக்கு ஏற்படும் ரேபிஸ் பாதிப்பை நோயாக டெல்லி அரசு அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதன்படி ரேபிஸ் வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதன்மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடியும். நோய் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க முடியும்.
டெல்லி அரசின் முயற்சிக்கு அனைத்து மருத்துவமனைகளும், பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைப்படி டெல்லியில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அமைச்சர் பங்கஜ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.