“வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றங்கள் மூலம் நீதி” - மவுனம் கலைத்த பிரதமர் மோடி உறுதி

“வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றங்கள் மூலம் நீதி” - மவுனம் கலைத்த பிரதமர் மோடி உறுதி
Updated on
2 min read

புதுடெல்லி: வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மவுனம் கலைத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, தவறிழைத்தவர்கள் நிச்சயம் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று உறுதியளித்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த இயக்கத்தினர் கடந்த ஜூலை 20-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணியை மேற்கொள்ள முயன்றபோது அதை தடுத்த நிறுத்துகையில் போலீஸார் - போராட்டக்காரர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

அப்போது போலீஸார் போராட்டக்காரர்களை தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் கலைத்தனர். தடியடியின்போது போராட்டக்காரர்களை தலையில் தாக்கியதாகவும், ஆணியுடன் கூடிய லத்தி, கற்களை பயன்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறினர். இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மவுனம் கலைத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, தவறிழைத்தவர்கள் நிச்சயம் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “நமது இளைஞர்களின் நலனும் எதிர்காலமும் தான் எதையும் விட முக்கியமானது. வினாத் தாள்கள் கசிவில் ஈடுபடுபவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனை வழங்கும் வகையில், விரைவு நீதிமன்றங்களை அமைக்க நாம் முடிவு செய்துள்ளோம். இது தொடர்பான அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். இது மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான நமது தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும். நமது இளைஞர்களின் எதிர்காலத்திற்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் எவரும் தப்பிக்க முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 152 வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் எந்த ஒரு குற்றவாளியும் நடவடிக்கைக்கு உள்ளாகவில்லை.” என்று குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், இன்று (ஜூலை 23) பிரதமர் மோடி விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

டெல்லி ஜந்தர் மந்தரில் திரளும் இளைஞர்கள் அனைவரும் மத்தியில் ஆளும் பாஜக மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்திவரும் சூழலில், இளைஞர்கள் கொந்தளிப்பை குறைக்கும் வகையில் பிரதமரின் இந்த அறிவிப்பு அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

‘பதவி விலக வேண்டும்’

ஆனால், பிரதமரின் ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள சிஜேபி, “தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” என்று ஒற்றை வரியில் பதிலளித்து தங்களின் போராட்டம் தொடரும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர்.

மேலும், டெல்லியில் இன்று 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், “மோடி மொத்த டெல்லியையும் முடக்கத் தயாராக இருக்கிறார். ஆனால் தர்மேந்திர பிரதானை பதவிநீக்கம் செய்யத் தயாராக இல்லை” என்று சிஜேபி இயக்கத் தலைவர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி எதிர்வினை:

இந்நிலையில், பிரதமரின் வாக்குறுதிக்கு எதிரிவினையாற்றியுள்ளார் ராகுல் காந்தி. இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “நமது இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது நீங்கள்தான். நமது கல்வி முறையை முழுமையாக கைப்பற்றவும், அழிக்கவும் நீங்கள் அனுமதித்தீர்கள், ஊக்குவித்தீர்கள் - மேலும் அதற்கு பொறுப்பான ஒவ்வொருவரையும் நீங்கள் பாதுகாத்தீர்கள்.மாணவர்களின் கோரிக்கைகள் தெளிவானவை:

1. தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்யுங்கள்.

2. மாணவர்களிடம் மன்னிப்பு கேளுங்கள்.

3. மாணவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

“வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றங்கள் மூலம் நீதி” - மவுனம் கலைத்த பிரதமர் மோடி உறுதி
டெல்லியில் திரளும் ஜென்ஸீ இளைஞர்களும், சிஜேபி போராட்ட தாக்கமும் - ஓர் அலசல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in