

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.36,000 வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஏப்.23, 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. தேர்தலையொட்டி மேற்கு வங்கத்தின் விஷ்ணுபூர், புருலியா, ஜார்கிராம், மிதினாபூர் உள்ளிட்ட பகுதிகளில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று தீவிர பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தோற்கடித்துவிட்டன. பெண்களுக்கு துரோகம் இழைத்த திரிணமூல் கட்சிக்கு வரும் தேர்தலில் பெண்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள். மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.
பெண்களின் குடும்பத்தில் யாருக்காவது சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக டயாலசிஸ் சிகிச்சை அளிக்கப்படும். மேற்கு வங்க பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 உதவித் தொகை வழங்கப்படும். இதன்படி ஆண்டுதோறும் பெண்களுக்கு ரூ.36,000 வழங்கப்படும். மத்திய அரசு சார்பில் பெண்களின் குழந்தைப்பேறுக்கு ரூ.21,000 அளிக்கப்படும்.
பெண் குழந்தைகளின் கல்விக்கு ரூ.50,000 வழங்கப்படும். பாஜக ஆட்சி அமைக்கும்போது மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் அமல்படுத்தப்படும். கடந்த 15 ஆண்டுகளாக திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடத்தி வருகிறது. ஆனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. கல்வி, சுகாதாரம், வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் மாநிலம் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் வியாபித்து பரவி உள்ளது.
வேலை வாய்ப்பின்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சட்டம், ஒழுங்கு பாதிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜக அரசே, வங்க மொழிக்கு செம் மொழி அந்தஸ்தை வழங்கியது. மேற்கு வங்க விவசாயிகளுக்கு திரிணமூல் அரசு துரோகம் இழைத்து வருகிறது.
நீர்ப்பாசன திட்டங்கள் மிக நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டு உள்ளன. வயல்கள் வறண்டு, விவசாயிகள் கண்ணீரில் தத்தளித்து வருகின்றனர். பாஜக ஆட்சி அமைத்தால் நீர்ப்பாசன திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விவசாயிகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம். மேற்கு வங்க ஆசிரியர் தேர்வில் மிகப்பெரிய மோசடிகள் நடைபெற்று உள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கனவு கலைந்தது.
பாஜக ஆட்சி அமைத்தால் நேர்மையான முறையில் அரசு பணிக்கு ஆட்தேர்வு செய்யப்படும். எனது அனுபவத்தின் அடிப்படையில் மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. இவ்வாறு பிரதமர் பேசினார்.
செய்தியாளர்களுக்கு நிதி:
மேற்கு வங்க பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா கொல்கத்தாவில் கூறும்போது, “மக்களுக்காகவும் ஜனநாயகத்தை காப்பாற்றவும் செய்தியாளர்கள் தன்னலம் இன்றி பணியாற்றி வருகின்றனர். அவர்களின் நலனில் பாஜக மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறது. மேற்கு வங்கத்தில் நாங்கள் ஆட்சி அமைத்தால் அனைத்து செய்தியாளர்களுக்கும் அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.5,000 உதவித் தொகை வழங்கப்படும். பத்திரிகை சுதந்திரம் பாதுகாக்கப்படும்" என்று தெரிவித்தார்.