

புதுடெல்லி: ”இந்த பட்ஜெட் கட்டாயத்தினால் உருவானது அல்ல. தயார் நிலை மற்றும் உத்வேகத்தால், வளர்ந்த நாடாக உருவாக நாங்கள் ஆவலுடன் உள்ளோம் என்பதை காட்டும் பட்ஜெட்” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்த ஆண்டு மத்திய பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கூறியதாவது: “நமது நாட்டில் திறன் மிகு இளைஞர்கள் அதிகளவில் உள்ளனர். குறைந்த பணவீக்கம் மற்றும் பொருளாதார நிலைத் தன்மையுடன் கூடிய வலுவான வளர்ச்சியில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். விண்வெளி, விளையாட்டு, ஸ்டார்ட்-அப்கள் எனப் பல்வேறு துறைகளில் நமது இளைஞர்கள் சாதனை படைத்து வருகின்றனர்.
இந்த முன்னேற்றங்களின் காரணமாக, மக்கள் தற்போதைய சூழலை, இந்தியாவுக்கான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பாகப் பார்க்கிறார்கள். இந்த முன்னேற்றங்கள் வேகம் எடுத்துள்ள நிலையில், நாடு 75-வது சுதந்திர தினத்தை கடந்துள்ளது. ஒரு வளர்ந்த நாட்டை உருவாக்குவது என்பது வெறும் உள்கட்டமைப்பு அல்லது பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல, அது தூய்மை உட்பட பல சமூகப் பழக்க வழக்கங்கள் சார்ந்தது என்பதையும் மக்கள் அறிந்துள்ளனர்.
இந்த பட்ஜெட் கட்டாயத்தினால் உருவான கணக்கு புத்தக பட்ஜெட் அல்ல. தயார் நிலை மற்றும் உத்வேகத்தால் வளர்ந்த நாடாக உருவாக நாங்கள் ஆவலுடன் உள்ளோம் என்பதை பிரதிபலிக்கும் பட்ஜெட்.
எனவே, இந்த பட்ஜெட்டை வெறும் ‘பட்ஜெட் 2026’ ஆக மட்டும் பார்க்காமல், 21ம் நூற்றாண்டின் 2-வது காலாண்டின் முதல் பட்ஜெட்டாகப் பார்க்க வேண்டும். நாம் இப்போது எடுக்கும் முடிவுகள் 2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதம் உருவாக அடித்தளம் அமைக்கின்றன. வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் பெண்கள் முக்கிய பங்காற்றுவர் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
பெண் குழந்தைகள் பிறப்பது முதல், அவர்களின் எண்ணங்கள் நிறைவேறும் வரை முன்னேற்றத்துக்கு தேவையான நடவடிக்கைகளையும், சீர் திருத்தங்களையும் அரசு செய்து கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் பெண்கள் முன்னணியில் உள்ளனர் என்பது பெருமையான விஷயம். விண்வெளித்துறையாக இருக்கட்டும் அல்லது ஸ்டார்ட் அப் நிறுவனங்களாக இருக்கட்டும், அனைத்து துறைகளிலும் பெண்கள் சிறப்பாக பணியாற்றுகின்றனர்.
2014 முதல் முந்தைய நிர்வாகங்கள் விட்டுச் சென்ற கட்டமைப்பு இடைவெளிகளை நாங்கள் சரி செய்துள்ளோம், பெண்களின் பங்களிப்பை வலுப்படுத்தியுள்ளோம். நமது விவசாயிகளின் கண்ணியத்தை உறுதி செய்துள்ளோம். இந்த பட்ஜெட் வேகத்தை அதிகரிக்கவும், வேகமாக மாறிவரும் உலகின் வாய்ப்புகளுக்கு ஏற்ப நமது இளைஞர்களைத் தயார்படுத்தும் நோக்கிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.