

புதுடெல்லி: வீர சாவர்க்கரின் 143-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அவருக்கு புகழஞ்சலி செலுத்தினார். அவரது துணிச்சலும் தேசபக்தியும் எப்போதும் மக்களுக்கு ஊக்கமளிக்கும் என்று அவர் கூறினார்.
இதுகுறித்து ‘எக்ஸ்' தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில், “வீர சாவர்க்கரின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்கிறேன். அவரது துணிச்சலும் தேசபக்தியும் எப்போதும் மக்களுக்கு ஊக்கமளிக்கும். அவரது புத்தி கூர்மையும், சமூக சீர்திருத்தம் தொடர்பான அவரது கருத்துகளும் குறிப்பிடத்தக்கவை” என்று கூறியுள்ளார்.
சாவர்க்கரை ஒரு சிறந்த புரட்சியாளர் மற்றும் தீவிர தேசியவாத சிந்தனையாளர் என்று வர்ணித்த பிரதமர், வீரம் மற்றும் புத்திகூர்மை நிறைந்த அவரது ஆளுமை, நாட்டின் ஒவ்வொரு தலைமுறைக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்றார். அரசியல்வாதியும், சிந்தனையாளரும், இந்து மகாசபையின் முக்கிய தலைவருமான சாவர்க்கர், மே 28, 1883-ல் பிறந்தார். பிப்ரவரி 26, 1966-ல் தனது 82-வது வயதில் காலமானார்.
என்டிஆர் பிறந்த நாள் ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான என்.டி.ராமாராவின் 103-வது பிறந்த நாளையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து அவர் தனது ‘எக்ஸ்' பதிவில், “மாபெரும் தலைவர் என்டிஆருக்கு அவரது பிறந்த நாளையொட்டி எனது அஞ்சலிகள். ஏழை எளியோர் மற்றும் விளிம்புநிலை மக்களின் கண்ணியத்தை உறுதி செய்த, பொதுநலன் மற்றும் நல்லாட்சியின் மீதான அவரது அர்ப்பணிப்பணிப்புக்காக அவர் அன்புடன் நினைவுகூரப்படுகிறார்.
திரைத்துறைக்கு என்டிஆர் ஆற்றிய பங்களிப்புகள், தலைமுறை தலைமுறையாக மக்களைத் தொடர்ந்து கவர்ந்து வருகின்றன. அவரது வாழ்வும் கொள்கைகளும் இன்றும் அளவற்ற உத்வேகத்தின் ஆதாரமாகத் திகழ்கின்றன. எனது நண்பர் சந்திரபாபு நாயுடு தலைமையில் ஆந்திராவில் அமைந்துள்ள என்டிஏ அரசு, மக்கள் நலனுக்காக என்டிஆர் கொண்டிருந்த உயரிய லட்சியங்களை முன்னெடுத்துச் செல்வதில் உறுதியுடன் உள்ளது” என்று கூறியுள்ளார்.
நடிகரும் அரசியல்வாதியுமான என்.டி. ராமராவ், மக்கள் மத்தியில் என்டிஆர் என்றே பரவலாக அறியப்படுகிறார். இவர் மே 28, 1923-ல் பிறந்தார். சுமார் 300 திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்குத் திரையுலகில் 'சூப்பர் ஸ்டார்' அந்தஸ்துக்கு உயர்ந்தார். 1982-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியை நிறுவினார். ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராக மூன்று முறை பதவி வகித்துள்ளார். ஜனவரி 18, 1996-ல் தனது 72-வது வயதில் காலமானார்.