

அகமதாபாத்: குஜராத்தின் சோமநாதர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வழிபாடு நடத்தினார்.
குஜராத்தின் கிர்சோம்நாத் மாவட்டம், பிரபாச பட்டினம் கடற்கரையில் சோமநாதர் கோயில் அமைந்துள்ளது. கடந்த 1026-ம் ஆண்டு கஜினி முகமது இந்த கோயில் மீது தாக்குதல் நடத்தி ஏராளமான செல்வங்களை கொள்ளையடித்து சென்றார். அதன்பிறகு முகலாய ஆட்சியாளர்களால் கோமநாதர் கோயில் பலமுறை தாக்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், முதல் துணை பிரதமர் சர்தார் வல்லபபாய் படேலின் முயற்சியால் சோமநாதர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டது.
கஜினி முகமதுவின் தாக்குதலுக்கு பிறகு ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து சோமநாதர் கோயில் கம்பீரமாக நிற்கிறது. இதை நினைவுகூரும் வகையில் கடந்த 8-ம் தேதி சோமநாதர் சுயமரியாதை பெருவிழா தொடங்கியது. இந்த விழா நாளையுடன் நிறைவடைகிறது.
இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை சோமநாதர் கோயிலுக்கு சென்றார். இரவு 8 மணியளவில் ஓம்கார மந்திரம் பாராயணம் நிகழ்ச்சியில் பங்கேற்று சுவாமியை வழிபட்டார். அதன் பின்னர் ட்ரோன் நிகழ்ச்சியைப் பார்வையிட்டார்.
இன்று காலை சுமார் 9.45 மணியளவில் சோமநாதர் கோயிலை பாதுகாக்க உயிர்த் தியாகம் செய்த எண்ணற்ற வீரர்களை கவுரவிக்கும் வகையில் நடைபெறும் பாரம்பரிய வீர யாத்திரையில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அதன் பிறகு காலை 10.15 மணியளவில் சோமநாதர் கோயிலில் அவர் வழிபாடு நடத்துகிறார். காலை 11 மணியளவில் சோமநாதர் சுயமரியாதை பெருவிழா தொடர்பான நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று பேசுகிறார்.
இன்று பிற்பகலில் கட்ச் மற்றும் சவுராஷ்டிரா பகுதிக்கான துடிப்பு மிக்க குஜராத் மண்டல மாநாடு ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்பார். அங்கு வர்த்தக கண்காட்சியை அவர் தொடங்கி வைப்பார். பின்னர் ராஜ்கோட்டில் உள்ள மார்வாடி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் அவர் சிறப்பு உரையாற்றுவார். பின்னர் ராஜ்கோட்டிலிருந்து அகமதாபாத் செல்லும் பிரதமர் மோடி மாலை 5.15 மணியளவில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை தொடங்கி வைப்பார்.
அகமதாபாத்தில் நாளை ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸை பிரதமர் மோடி சந்திக்கிறார். இரு தலைவர்களும் காலையில் சபர்மதி ஆசிரமத்துக்கு செல்கின்றனர். அதன்பிறகு சபர்மதி ஆற்றங்கரையில் நடைபெறும் சர்வதேச பட்டம் விடும் விழாவில் இருவரும் பங்கேற்க உள்ளனர். பின்னர் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் இரு தலைவர்களும் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அப்போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.